தமிழரசுக்கட்சி தொடர்பான வழக்கில் எதிராளிகள் அனைவரது மறுமொழியையும் ஒருநிலைப்பாடாக பதிவுசெய்து வழக்கை முடிவுறுத்துவதற்கு தீர்மானித்துள்ளதாக நாடாளுமன்ற உறுப்பினர் எம்.எ.சுமந்திரன் தெரிவித்துள்ளார்.
தமிழரசுக்கட்சியின் மத்தியகுழு கூட்டம்வவுனியா இரண்டாம் குறுக்குதெருவில் அமைந்துள்ள தனியார் விருந்தினர் விடுதியில் இன்று காலை இடம்பெற்றது.
அதன்பின்னர் இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் கலந்துகொண்டு கருத்து தெரிவிக்கும் போதே அவர் இவ்வாறு தெரிவித்தார்.
தொடர்ந்து கருத்து தெரிவித்த அவர்,
இன்றைய கூட்டத்தில் தமிழரசுக்கட்சியின் வழக்கு தற்போது எந்த நிலையில் உள்ளது என்பது தொடர்பான விளக்கம் அனைவருக்கும் வழங்கப்பட்டது.
கடந்த தவணையில் எதிராளிகளாக பெயரிடப்பட்ட ஏழுபேருடன் கிளிநொச்சியை சேர்ந்த ஜீவராஜா என்பவர் தன்னையும் இணைத்துக்கொள்ளுமாறு விண்ணப்பம் செய்திருந்தார்.
அவரது விண்ணப்பம் தொடர்பாக ஆட்சேபனைகள் இருப்பின் அந்த ஆட்சேபனைகளை தெரிவிப்பதற்காக, கட்சியின் தலைவர் மாவை சேனாதிராஜா மற்றும் யோகேஸ்வரன் சார்பில் ஆஜராகிய சட்டத்தரணி அவகாசம் வழங்குமாறு தவணை கேட்டிருந்தார். நானும் அப்படி கேட்டிருக்கின்றேன். அதனையடுத்து எதிர்வரும் யூலை 19 ஆம் திகதிக்கு வழக்கு அழைக்கப்படவுள்ளது
அந்த வகையில் கடந்த தவணைக்கு முன்பாக கட்சியின் மத்தியசெயற்குழு எடுத்த தீர்மானத்திற்கமைய வழக்கை முடிவுறுத்திக்கொள்வது தொடர்பாக நீதிமன்றிலே நான் கூறியிருக்கின்றேன். எதிராளிகள் அழைத்துள்ள ஆட்சேபனைகள் தொடர்பாக வழக்காளி தன்னுடைய நிலைப்பாட்டை தெரியப்படுத்த வேண்டும் என்ற காரணத்திற்காகவே கடந்த தவணை வழக்கு எடுத்துக்கொள்ளப்பட்டது.
இவ்வாறு சுமந்திரன் தெரிவித்தார்.



