சஜித் பிரேமதாச தன்னிச்சையாக பொதுஜன பெரமுன பாராளுமன்ற உறுப்பினர்களையும் முன்னாள் இராணுவ அதிகாரிகளையும் ஐக்கிய மக்கள் சக்தியில் இணைத்தமையினால் ஏற்பட்ட உள்ளக முரண்பாடுகள் காரணமாக அக்கட்சியிலுள்ள சுமார் 11 பாராளுமன்ற உறுப்பினர்கள் சுயாதீனமாக செயற்படுவதற்கான பேச்சுவார்த்தைகளை ஆரம்பித்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
கடந்த வாரத்தில், அந்த உள்முரண்பாடுகள் உச்சத்தை எட்டிய நிலையில், சுயாதீனமாக செயற்படுவதற்கான பேச்சுவார்த்தைகள் ஆரம்பமாகியுள்ளன. குறிப்பாக பீல்ட் மார்ஷல் சரத் பொன்சேகா மற்றும் லக்ஸ்மன் கிரியெல்ல மீதான தொடர்ச்சியான தாக்குதல்களால், ஒருமித்த கருத்துடன் பாராளுமன்ற உறுப்பினர்கள் கலந்துரையாடல்களை ஆரம்பித்துள்ளனர்.
பொதுஜன பெரமுனவின் பாராளுமன்ற உறுப்பினர்களான பேராசிரியர் ஜி.எல்.பீரிஸ் மற்றும் கலாநிதி நாலக கொடஹேவா ஆகியோருக்கு ஐக்கிய மக்கள் சக்தியில் சஜித் பிரேமதாச விசேட சலுகைகளை வழங்கியுள்ளதாகவும் இதன் விளைவாக ஏற்பட்ட முரண்பாடுகள் பொதுஜன பெரமுனவின் வசந்த யாப்பா பண்டாரவை இணைத்துக் கொண்டதன் மூலம் உச்சக்கட்டத்தை எட்டியுள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இந்த நிலையில், அடுத்த பாராளுமன்றத் தேர்தலில் ஐக்கிய மக்கள் சக்தி வெற்றி பெற்றால், யாருக்கு அமைச்சர் பதவி வழங்கப்படும் என்பதை சஜித் பிரேமதாச வெளிப்படுத்த வேண்டும் என ஐக்கிய மக்கள் சக்தியின் சிரேஷ்ட உறுப்பினர்கள் குழுவொன்று சஜித் பிரேமதாசவுக்கு அழுத்தம் கொடுப்பதாகவும் தகவல்கள் வெளியாகியுள்ளன.
முன்னாள் இராணுவத் தளபதியும் பாதுகாப்புப் பதவி நிலை பிரதானியுமான ஜெனரல் மஹேஸ் சேனநாயக்க மற்றும் முன்னாள் இராணுவ தளபதியும் இலங்கை இராணுவ பதவி நிலை பிரதானியுமான மேஜர் ஜெனரல் சத்தியபிரிய லியனகே உட்பட பல முன்னாள் படை தளபதிகள் ஐக்கிய மக்கள் சக்தியோடு இணைந்துள்ளனர். அத்துடன் ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவிலிருந்து விலகி டலஸ் அழகப்பெரும தலைமையிலான சுதந்திர மக்கள் காங்கிரஸில் செயற்பட்ட பேராசிரியர் ஜி.எல்.பீரிஸ் தலைமையிலான ஒரு குழுவினரும் தற்போது ஐக்கிய மக்கள் சக்தியுடன் இணைந்துள்ளனர்.