ஜூன் இறுதிப் பகுதியிலேயே தோ்தலில் போட்டியிடும் முடிவை ரணில் அறிவிப்பாா்

நாடு வங்குரோத்து நிலையிலிருந்து மீண்டுவிட்டது என்ற உத்தரவாதத்தை சர்வதேசம் வழங்கிய பின்னரே ஜனாதிபதித் தேர்தலில் களமிறங்கும் அறிவிப்பை உத்தியோகபூர்வமாக அறிவிக்கவுள்ளதாக ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க தெரிவித்துள்ளார் என அறியமுடிகின்றது.

எதிர்வரும் ஜூன் நடுப்பகுதியில் வங்குரோத்து நிலையிலிருந்து இலங்கை மீண்டு விட்டது என்ற அறிவிப்பு வெளிவரவுள்ளது எனவும் தெரியவருகின்றது.

அதுவரை நலன்புரித் திட்டங்களை முன்னெடுப்பது எனவும், முன்கூட்டியே தேர்தலில் களமிறங்கும் அறிவிப்பை விடுத்தால் அது நலன்புரித திட்டங்களைப் பகிரும் விடயத்தில் தாக்கத்தை ஏற்படுத்தக்கூடும் எனவும் ஜனாதிபதி கூறியுள்ளார் என நம்பகரமான வட்டாரங்களில் இருந்து தகவல் வெளியாகியுள்ளது.

தான் பொது வேட்பாளராகக் களமிறங்க உத்தேசித்துள்ளதால் வெளியில் இருந்துகூட பலரும் ஆதரவு வழங்கலாம் என்ற கருத்தையும் தனக்கு நெருக்கமானவர்களிடம் ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க முன்வைத்துள்ளார்.

ஐக்கிய மக்கள் சக்தியின் சாா்பில் எதிா்க்கட்சித் தலைவா் சஜித் பிரேமதாஸவும், ஜே.வி.பி.யின் சாா்பில் அநுரகுமார திஸாநாயக்கவும் ஜனாதிபதித் தோ்தலில் போட்டியிடும் முடிவை ஏற்கனவே அறிவித்துள்ளாா்கள். அதேவேளையில், தமிழ்க் கட்சிகள் சிலவும் பொது வேட்பாளா் ஒருவரை களமிறக்குவதற்கான முயற்சிகளை மேற்கொண்டு வருகின்றன என்பதும் குறிப்பிடத்தக்கது.