இலங்கையைக் கண்டிப்பதற்கு மோடிக்கு துணிச்சல் இல்லை – ஸ்டாலின் குற்றச்சாட்டு

“பிரதமர் மோடிக்கு இலங்கையைக் கண்டிக்கவும் துணிச்சல் இல்லை, சீனாவை எதிர்க்கவும் துணிச்சல் இல்லை. இந்த லட்சணத்தில் நீங்கள் கச்சத்தீவைப் பற்றிப் பேசலாமா?” என வேலூரில் நடந்த பிரச்சாரப் பொதுக் கூட்டத்தில் தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் கேள்வி எழுப்பியுள்ளார்.

தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் வேலூர் கோட்டை மைதானத்தில் நேற்று நடைபெற்ற இண்டியா கூட்டணியின் மக்களவைத் தேர்தல் பரப்புரைப் பொதுக் கூட்டத்தில் கலந்துகொண்டார். இதன்போது அவர் மேலும் உரையாற்றுகையில்,

“கடந்த பல ஆண்டுகளாக கச்சத்தீவு பற்றி நாடாளுமன்றத்தில் கேள்வி எழுப்பியபோதெல்லாம், அதற்கு உரிய பதிலைச் சொல்லவில்லை. எத்தனையோ பேர் ஆர்.டி.ஐ. விண்ணப்பம் செய்தபோதும் தெளிவான தகவல்களைக் கொடுக்கவில்லை. உச்ச நீதிமன்ற விசாரணையில் இருக்கிறது என்று பதில் சொல்லாமல் இருந்த பா.ஜ.க. அரசு, இப்போது ஆர்.டி.ஐ. மூலம் எப்படி தவறான தகவலைக் கொடுத்தார்கள்?

பா.ஜ.கவைச் சேர்ந்த ஒரு தனிநபருக்கு எப்படி, வெளியுறவுத் துறை நாட்டின் பாதுகாப்பு தொடர்பான ஆவணங்களைக் கொடுத்திருக்கிறார்கள்? நான்காவது, கச்சதீவுக்காக இப்போது திடீர் கண்ணீர் வடிக் கும் பிரதமர் மோடி, கடந்த பத்தாண்டுகளில் வரலாற்றிலேயே இல்லாத அளவுக்கு மீனவர்கள் கைது, துப்பாக்கிச்சு+டு என்று நடந்ததே? ஒரு கண்டிப்பாவது இலங்கைக்குச் செய்தாரா? ஏன் செய்யவில்லை?

இப்போது, சீனா பற்றியாவது வாய்திறந் தாரா? அருணாசலப் பிரதேசத்தின் பல பகுதிகளுக்குச் சீனா சொந்தம் கொண்டாடுகிறதே? 30-க்கும் மேற்பட்ட நம்முடைய இடங்களுக்குச் சீனமொழியில் பெயர்களை வெளியிட்டிருக்கிறதே? அதற்கு என்ன சொல்லப் போகிறீர் கள்? இலங்கையைக் கண்டிக்கவும் துணிச்சல் இல்லை, சீனாவை எதிர்க்கவும் துணிச்சல் இல்லை. இந்த லட்சணத் தில் நீங்கள் கச்சத்தீவைப் பற்றிப் பேசலாமா?” என்றார்.