ஈஸ்டர் குண்டுத் தாக்குதலை நடத்தியது யார் என்பது தனக்குத் தெரியும் எனத் தெரிவித்த முன்னாள் ஜனாதிபதி மைத்ரிபால சிறிசேனவை, ஜனாதிபதி விசாரணைக்குழுவில் முன்னிலையாகி உரிய ஆதாரங்களுடன் தகவல்களை சமர்ப்பிக்குமாறு உத்தரவிடப்பட்டுள்ளது.
2023 செப்டெம்பரில் ஒளிபரப்பப்பட்ட சனல் 4 திரைப்படத்தின் மூலம் ஈஸ்டர் தாக்குதல் பற்றி வெளிப்படுத்திய தகவல்களின் விசாரணை உட்பட ஈஸ்டர் தாக்குதல் தொடர்பான விசாரணைகளை மேற்கொண்டுவரும் உயர் நீதிமன்ற முன்னாள் நீதியரசர் ஐ.எம்.இமாம் தலைமையிலான விசாரணைக்குழுவே இந்த அழைப்பை விடுத்துள்ளது.
விசாரணைக் குழுவின் தலைமைச் செயலாளர் திருமதி எஸ். மனோகரன், இது தொடர்பான எழுத்துமூல அழைப்பை கடந்த வியாழக்கிழமை முன்னாள் ஜனாதிபதி மைத்ரிபால சிறிசேனவுக்கு அனுப்பி வைத்தார். அதன்படி, நாளை ஏப்ரல் 2ஆம் திகதி விசாரணைக் குழு முன் ஆஜராகி, சி.ஐ.டிக்கு அவர் அளித்த வாக்குமூலம் தொடர்பான அனைத்து ஆதாரங்களையும் சமர்ப்பிக்குமாறும் அந்த எழுத்துமூல அழைப்பில் குறிப்பிடப்பட்டுள்ளது.
இதேவேளை, முன்னாள் ஜனாதிபதி மைத்ரிபால சிறிசேன, ஏப்ரல் மாதம் 4ஆம் திகதி மாளிகாகந்த நீதவான் நீதிமன்றில் ஆஜராகி, ஈஸ்டர் தாக்குதல் தொடர்பில் தனக்குத் தெரிந்த உண்மைகளை முன்வைக்குமாறு மாளிகாகந்த நீதவான் உத்தரவிட்டுள்ளார்.



