கடன்களை ஜூலைக்கு முன் மறுசீரமைக்க வேண்டும் – இல்லையெனில் நெருக்கடி என்கிறாா் சம்பிக்க

வெளிநாட்டு அரசமுறை கடன்களை எதிர்வரும் ஜூலை மாதத்துக்குக்குள் மறுசீரமைக்காவிடின் தேசிய மற்றும் சர்வதேச மட்டத்தில் பாரிய நெருக்கடிகள் ஏற்படும். பஷிலின் ஆலோசனைக்கு அமைய செயற்படுவதா? அல்லது நாட்டை ஸ்திரப்படுத்துவதா ? என்பதை ஜனாதிபதியே தீர்மானித்துக் கொள்ள வேண்டும் என ஐக்கிய குடியரசு முன்னணியின் தலைவரும்,பாராளுமன்ற உறுப்பினருமான பாட்டலி சம்பிக்க ரணவக்க தெரிவித்தார்.

இரத்தினபுரியில் நடந்த மக்கள் சந்திப்பிலேயே அவர் மேற்கண்டவாறு கூறினார்.

மேலும், “இனங்களுக்கிடையில் முரண்பாடுகளை ஏற்படுத்தி நல்லிணக்கத்துக்கு பாதிப்பை ஏற்படுத்தும் வகையில் கருத்துக்களை குறிப்பிட்டதற்காக பொதுபல சேனா அமைப்பின் பொதுச்செயலாளர் ஞானசார தேரருக்கு மேல் நீதிமன்றம் நான்கு ஆண்டுகள் கடூழிய சிறைத்தண்டனை விதித்துள்ளது. ஞானசார தேரரை பயன்படுத்தி சிங்கள – முஸ்லிம் இனங்களுக்கிடையில் முரண்பாட்டைத் தோற்றுவித்தவர்கள் இன்று சுதந்திரமாக உள்ளார்கள்.

உயிர்த்த ஞாயிறு குண்டுத்தாக்குதல் சம்பவத்துக்கு முன்னர் திட்டமிட்ட வகையில் இன முரண்பாடுகள் உருவாக்கப்பட்டன. அதனை ஒரு தரப்பினர் தங்களின் குறுகிய அரசியல் தேவைகளுக்காக பயன்படுத்திக் கொண்டார்கள். பொருளாதார நெருக்கடியிலிருந்து நாடு சற்று ஸ்திரநிலையடைந்துள்ளது என்பதை ஏற்றுக்கொள்ள வேண்டும். ஆனால், தற்போதைய முன்னேற்றம் நிலையானதாக அமைய வேண்டும். பொருளாதார மீட்சிக்காக அரசாங்கம் எடுக்கும் சிறந்த தீர்மானங்களுக்கு ஒத்துழைப்பு வழங்குவோம்.

வெளிநாட்டு அரசமுறை கடன்கள் எதிர்வரும் ஜூலை மாதத்துக்குள் மறுசீரமைக்க வேண்டும். இல்லையேல் தேசிய மற்றும் சர்வதேச மட்டத்தில் பெரும் நெருக்கடிகளை எதிர்க்கொள்ள நேரிடும்” என்று சம்பிக்க ரணவக்க எச்சரித்தாாா்.