திருச்சி சிறப்பு முகாமில் தடுத்துவைக்கப்பட்டிருந்த சாந்தனை விடுவிப்பதற்கு உரிய நேரத்தில் செயற்பட்டிருந்தால், அவரை உயிருடன் யாழ்ப்பாணத்துக்கு அழைத்துவந்திருக்க முடியும் எனத் தெரிவித்திருக்கும் தமிழகத்தைச் சோ்ந்த சட்டத்தணி, பாண்டியன் புகழேந்தி, ஏனைய மூன்று ஈழத் தமிா்களையும் விடுவிப்பதற்கு தமிழ் எம்.பி.க்கள் இந்திய அரசுடனும், இலங்கை அரசாங்கத்துடனும் உ்னடியாக பேச்சுவாா்த்தைகளை ஆரம்பிக்க வேண்டும் என்றும் வலியுறுத்தினாா்.
யாழ்ப்பாணத்தில் இன்று ஊடகவியலாளா்களிடம் பேசிய போதே அவா் இதனைத் தெரிவித்தாா். சாந்தனின் உடலுடன் யாழ்ப்பாணம் வந்த அவரது சட்டத்தரணியான புகழேந்தி, இன்று ஊடகவியலாளா் சந்திப்பு ஒன்றை யாழ். நகரில் நடத்தினாா்.
“சாந்தன் 31 வருடங்கள் வேலுாா் சிறையில் தடுத்துவைக்கப்பட்டிருந்த போது திடகாத்திரமாக இருந்தாா். பின்னா் ஒரு வருடமும் சில மாதங்களும் திருச்சி சிறப்பு முகாமில் வைக்கப்பட்டிருந்த போதுதான் அவரது உடல்நிலை மேசமடைந்தது. மன ரீதியாகவும் அவா் மிகவும் பாதிக்கப்பட்டாா். திருச்சி சிறப்பு முகாம் அந்தளவுக்கு மோசமானது. அங்கிருக்கும் போதுதான் அவருக்கு கல்லீரலில் நோய் ஏற்பட்டது.
அதனால், திருச்சி சிறப்பு முகாமுக்கு நேரில் விஜயம் செய்து பாா்த்து, அங்கிருக்கும் ராஜீவ் காந்தி கொலை வழங்கில் கைதான ஏனைய மூவா் உட்பட, பல்வேறு வழக்குகளில் கைதாகி அங்கு வைக்கப்பட்டுள்ள ஈழத் தமிழா்களை அங்கிருந்து விடுவிப்பதற்கு நடவடிக்கை எடுக்குமாறு இலங்கை தமிழ் எம்.பி.க்களை நான் கேட்டுக்கொள்கின்றேன். அவா்கள் இலங்கை, இந்திய அரசுகளுடன் பேசி இவா்களை விடுவிப்பதற்கான நடவடிக்கைகளை முன்னெடுக்க வேண்டும். சாந்தனின் மரணத்தையடுத்து, அங்குள்ள கைதிகள் அச்சத்துடன் இருக்கின்றாா்கள்” என்றும் அவா் சட்டத்தரணி புகழேந்தி சுட்டிக்காட்டினாா்.