ஜே.வி.பி. தலைவரை இந்தியா அழைத்தது வழமையான ஒன்றுதான் – உயா் ஸ்தானிகா் சந்தோஸ் ஜா

santhosh ஜே.வி.பி. தலைவரை இந்தியா அழைத்தது வழமையான ஒன்றுதான் - உயா் ஸ்தானிகா் சந்தோஸ் ஜா”ஜேவிபியின் தலைவர் அநுர குமார திசநாயக்கவிற்கு இந்தியா சமீபத்தில் விடுத்த அழைப்பு வழமையான ஒன்று. ஒருநாட்டின் பிரபலமான நபர்களுக்கு விடுக்கப்படும் அழைப்பு” என தெரிவித்துள்ள இலங்கைக்கான இந்திய உயர்ஸ்தானிகர் சந்தோஸ் ஜா இந்த அழைப்பு வழமைக்குமாறானது இல்லை எனவும் தெரிவித்துள்ளார்.

ஏனைய நாடுகள் மற்றும் மக்களுடன் கலாச்சார பரிமாற்றத்தில் ஈடுபடுவதன் மூலம் இந்தியாவின் கலாச்சார உறவுகளில் ஈடுபட்டுள்ள இந்திய அரசாங்கத்தின் தன்னாட்சி அமைப்பான இந்திய உறவுகளுக்கான இந்திய கவுன்சிலின் வருகை திட்டத்தின் கீழ் ஜேவிபி தலைவருக்கு அழைப்பு விடுக்கப்பட்டதாகவும் இந்திய உயர் ஸ்தானிகர் தெரிவித்துள்ளார்.

இலங்கையின் அரசியல் தலைவர் ஒருவருக்கான வழமையான அழைப்பு இது எங்களிடம் ஒரு நிகழ்ச்சி திட்டம் உள்ளது அதன்அடிப்படையில் நாங்கள் ஏனைய நாடுகளின் வர்த்தக தலைவர்கள் அரசியல் தலைவர்கள் மதத் தலைவர்களை இந்தியாவிற்குஅழைக்கின்றோம் எனவும் இந்திய உயர்ஸ்தானிகர் தெரிவித்துள்ளார்.

ஜனாதிபதி தேர்தலில் போட்டியிடும் ஏனைய வேட்பாளர்களிற்கும் இவ்வாறான அழைப்பு விடுக்கப்படும் என எதிர்பார்க்கலாமா என்ற கேள்விக்கு, ஏனைய வேட்பாளர்கள் ஏற்கனவே இந்தியாவிற்கு விஜயம் மேற்கொண்டுள்ளனர் எனவும் உயா் ஸ்தானிகா் பதிலளித்தாா்.

அவர்கள் வரவிரும்பினால் அவர்கள் வரவேற்கப்படுவார்கள் எனவும் அவர் தெரிவித்துள்ளார். ஜேவிபி தலைவரை இந்திய வெளிவிவகார அமைச்சர் சந்தித்தமை குறித்து கருத்து தெரிவித்துள்ள இந்திய உயர்ஸ்தானிகர், இலங்கையின் பெரிய அரசியல் கட்சியொன்றின் தலைவரை இந்தியாவின் சிரேஸ்ட அமைச்சர்கள் எப்போதும் வரவேற்பார்கள் இது வழமைக்கு மாறானதில்லை எனவும் அவர்தெரிவித்துள்ளார்.