மீனவர்களின் பிரச்னையில் இலங்கையினதும் கடற்றொழில் அமைச்சரினதும் இராஜதந்திரம் தோற்றுப் போயுள்ளது என அகில இலங்கை மீனவ மக்கள் தொழிற்சங்கத்தின் வடக்கு மாகாண இணைப்பாளர் அ. அன்னராசா சுட்டிக்காட்டியுள்ளார்.
யாழ் ஊடக அமையத்தில் நடந்த செய்தியாளர் சந்திப்பிலேயே அவர் இதனைத் தெரிவித்தார். 2016. 11. 5ஆம் திகதி இலங்கை இந்திய வெளிவிகார அமைச்சு மட்டத்தில் கடற்தொழில் அமைச்சு மற்றும் பாராளுமன்ற உறுப்பினர்கள்
மட்டத்தில் எட்டப்பட்ட தீர்மானத்தை 2016 இல் இருந்து 2024 ஆம் ஆண்டு வரை நடைமுறைப்படுத்தப்படவில்லை.
மீனவர்கள் பிரச்னையில் அமைச்சருடையதும் இலங்கையினதும் இராஜதந்திரம் தோற்றுபோயுள்ளது என்பது தான் எங்களுடைய கருத்து.
கடற்றொழில் அமைச்சர் தொடர்ந்து வலியுறுத்தி வருகின்றார் மீனவர் பிரச்சினையில் முடிவு எடுக்கும் அதிகாரம் தனக்கே உண்டு என்றும், நான் தான் கடற்றொழில் அமைச்சர் என்றும் கூறிவருகின்றார். ஆனால், கடந்த காலங்களில் பிரதமர் ஒரு கருத்தையும் வெளிவிவகார அமைச்சர் ஒரு கருத்தையும் கூறிவந்துள்ளனர்.
ஆனால் மீனவர் பிரச்னையில் முடிவெடுக்க வேண்டிய கடற்றொழில் அமைச்சரே தற்பொழுது தோற்றுப் போன இராஜதந்திரம் என்பதை வெளிப்படுத்தியிருக்கின்றார். மீனவர் பிரச்னையில் இராஜதந்திர ரீதியில் இலங்கைக்கு அழுத்தம் வழங்கினால் தான் தனது பதவியை இராஜிநாமா செய்வேன் என தெரிவித்துள்ளார். இது எங்களுக்கு கவலை அளிக்கின்ற விடயம். வடக்கு கடற்தொழிலாளர்களின் பிரச்னையில் வெளிநாட்டு படகுகளை கையாள்வது தொடர்பிலான 2018 ஆம் ஆண்டு சட்டத்தை அமுல் படுத்துவதிலும் இராஜதந்திரம் தோற்கடிக்கப்பட்டுள்ளது.
இந்த சட்டம் இலங்கையில் முழுமையாக நடைமுறைப்படுத்தப்படாமையால் வடக்கு மாகாணத்தை சேர்ந்த கடற்றொழில் சமூகம் தொடர்ந்து பாதிக்கப்படுகிறது. இது ஏற்றுக் கொள்ளக்கூடிய விடயம் அல்ல. பொறுப்பு வாய்ந்தவர்கள் அதிகாரத்திலிருந்து கொண்டு இராஜதந்திரம் தோற்றுப் போய் உள்ளது என்று கூறுவது எங்களுக்கு கவலை அளிப்பதும் வேடிக்கையாகவும் இருக்கின்றது” என்று அவா் தெரிவித்தாா்.