இணையவழிப் பாதுகாப்புச் சட்டம் பொருளாதார மீட்சியை நோக்கிப் பயணிக்கும் இலங்கைக்கு எதிர்மறையான சமிக்ஞையை ஏற்படுத்தியுள்ளதாக இலங்கைக்கான அமெரிக்க தூதுவர் ஜூலிசங் சுட்டிக்காட்டியுள்ளார்.
அமெரிக்க வர்த்தக சம்மேளனத்தின் நிகழ்வில் உரையாற்றும் போதே அவர் இதனைச் சுட்டிக்காட்டியிருந்தார்.
இணையவழிப் பாதுகாப்பு உத்தேசச் சட்டம் இணைய வழிக் குற்றங்களை ஒடுக்குவதற்கு உருவாக்கப்பட்டாலும் அது நாட்டின் ஜனநாயகத்தை ஒடுக்குவதாகவே அமைந்துள்ளதாக சர்வதேச தொழில் நுட்ப நிறுவனங்கள் குறிப்பிடுவதாகவும் இலங்கைக்கான அமெரிக்கத் தூதுவர் தெரிவித்துள்ளார்.
இலங்கையில் வர்த்தகத்தில் ஈடுபடுவதற்கான சூழ்நிலையை முன்னேற்றகரமானதாக்குவதற்கு இலங்கை அரசாங்கம் சீர்திருத்தங்களை முன்னெடுக்கும் அதேவேளை இந்தச் சீர்திருத்தங்கள் குறித்து மக்களுக்குத் தெளிவாக அறிவிக்கவேண்டும் என்றும் இலங்கைக்கான அமெரிக்க தூதுவர் வலியுறுத்தியுள்ளார்.
இலங்கை அரசாங்கம் சீர்திருத்தங்களை முன்னெடுப்பது மிகவும் அவசியமானது எனத் தெரிவித்த அவர், சட்டமூலங்களை தாமதமாக அமுல்படுத்தவேண்டும் என்றும் குறிப்பிட்டார். இணைவழிப் பாதுகாப்புச் சட்டமூலம் தொடர்பான விளங்கங்களை சட்டம் நிறைவேற்றுவதற்கு முன்னர் 70 சதவீதமான மக்கள் அறிந்திருக்கவில்லை என்றும் இலங்கைக்கான அமெரிக்க தூதுவர் ஜூலிசங் மேலும் குறிப்பிட்டுள்ளார்.