புதிய நாடொன்றிக்கு புலம்பெயரும் இலங்கை அகதிகள்

இலங்கை அகதிகளை அவுஸ்திரேலியா நிராகரித்ததையடுத்து, அவர்கள் வேறு ஒரு நாட்டின் மீது கவனம் செலுத்தி வருவதாக ஐக்கிய நாடுகள் சபையின் அகதிகளுக்கான உயர்ஸ்தானிகராலயம் தெரிவித்துள்ளது.

இந்த தகவலை அவுஸ்திரேலியாவை தளமாகக் கொண்டு இயங்கும் செய்தி நிறுவனம் ஒன்று வழங்கியுள்ளது.

அவுஸ்திரேலியாவிற்கு செல்லும் இலங்கை அகதிகளை உடனடியாக திருப்பி அனுப்பும் நடவடிக்கையை மேற்கொண்டதையடுத்து, இந்து சமுத்திரத்தில் அமைந்துள்ள மடகஸ்காருக்கும், மொஸாம்பிக்கிற்கும் இடையில் அமைந்துள்ள பிரான்ஸிற்குச் சொந்தமான La Reunion மற்றும் Mayotte ஆகிய   நாடுகளை நோக்கி அவர்கள் பயணிக்கத் தொடங்கியுள்ளதாக ஐ.நா. சபை தெரிவித்துள்ளது.

2018ஆம் ஆண்டு ஜனவரி மாதம் முதல் 2019ஆம் ஆண்டு ஜுன் மாதம் வரையான காலப்பகுதியில் மட்டும் 291இலங்கையர்கள், குறித்த தீவுகளில் அகதி அந்தஸ்து கோரி தஞ்சமடைந்துள்ளதாக ஐ.நா. சுட்டிக்காட்டியுள்ளது.

எனினும், அகதி அந்தஸ்து கோரப்படும் விண்ணப்பங்கள் பிரான்ஸ் அரசாங்கத்தினால் அதிகளவில் நிராகரிக்கப்பட்டுள்ளதாக அறிய முடிகின்றது.

இந்நிலையில் பிரான்ஸ் அரசாங்கம் கடந்த ஏப்ரல் மாதம் அகதி அந்தஸ்து கோரிய இலங்கையர்கள் குறித்து கடும் போக்கை கைவிட்டதாக அறிய முடிகின்றது. இதற்கமைவாக 120 அகதிகளில் 34  பேருக்கான கோரிக்கைகள் ஏற்றுக் கொள்ளப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

இவர்களில் 60பேர் இலங்கைக்கு திருப்பி அனுப்பி வைக்கப்பட்டுள்ளதாக ஐக்கிய நாடுகள் சபையின் அறிக்கையில் சுட்டிக்காட்டியுள்ளது.

பிரான்சில் தடுத்து வைக்கப்பட்டுள்ள 120 பேரில் மூன்று குழந்தைகளும் அடங்குவதாக தெரிவிக்கப்படுகின்றது.