இறுதிப் போரில் சரணடைந்த விடுதலைப் புலிகள் குறித்த தகவல்களுக்கு எதிராக மேன்முறையீடு

இறுதி யுத்தத்தின் போது இராணுவத்தினரிடம் சரணடைந்த தமிழீழ விடுதலைப் புலிகள் தொடர்பாக இராணுவத்தால் வழங்கப்பட்ட தகவல்களுக்கு எதிராக, தகவலறியும் உரிமைக்கான ஆணைக்குழுவில் மேன்முறையீடு செய்யப்பட்டுள்ளது.

இந்த விடயம் தொடர்பாக இராணுவத்தால் வழங்கப்பட்டிருந்த பதில் ஏற்றுக் கொள்ளும்படி இல்லை என்பதால், இது தொடர்பாக தகவலறியும் உரிமைக்கான ஆணைக்குழுவில் மேன்முறையீடு செய்யப்பட்டுள்ளது.

தமிழீழ விடுதலைப் புலிகள் தொடர்பான தகவல்கள் இராணுவத்திடம் கோரி தகவல் அறிந்து கொள்ளும் உரிமைகள் தொடர்பான சட்டத்தின்படி, தமிழ் ஊடகமொன்றின் ஊடகவியலாளரால் கோரப்பட்டிருந்தது.

இதற்குப் பதிலளித்து பிரிகேடியர் ஏ.எம்.எஸ்.பீ.அத்தப்பத்து என்பவரினால் அனுப்பி வைக்கப்பட்ட தகவலில் இறுதி யுத்த காலத்தில் தமிழீழ விடுதலைப் புலிகள் எவரும் தங்களிடம் சரணடையவில்லை என திட்டவட்டமாக அறிவிக்கப்பட்டிருந்தது.

அத்தோடு புனர்வாழ்வு ஆணையாளர் பணியகத்தில் இது தொடர்பான தகவலைப் பெற்றுக் கொள்ள முடியுமென பதிலளித்திருந்த நிலையில் தகவலறியும் உரிமைக்கான ஆணைக்குழுவில் மேன்முறையீடு செய்யப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.