வடகிழக்கு வாழ் மக்களின் முக்கிய எதிர்பார்ப்பு இனப்பிரச்சினைக்கான அரசியல் தீர்வே – ஹஸன் பாஸி

வடகிழக்கு வாழ் மக்கள் இனப்பிரச்சினைக்கான அரசியல் தீர்வையே முக்கியமாக எதிர்பார்க்கின்றனர், இந்த நாட்டில் வாழும் சிறுபான்மை மக்கள் எதிர்நோக்கும் பிரச்சினைகளுக்கு கோட்டாபய ராஜபக்ஷ ஜனாதிபதியானால் ஒரு போதும் தீர்வு கிட்டப் போவதில்லை, கோட்டாபய ராஜபக்ஷவை சிறுபான்மை மக்கள் ஆதரிக்க வேண்டும் என்று கூறுவோர் சுயநல அரசியல்வாதிகள் என பேருவளை நகர சபை எதிர்க் கட்சித் தலைவர் ஹஸன் பாஸி தெரிவித்தார்.

பேருவளை மஹகொட பகுதியில் கம்பெரலிய அபிவிருத்தி வேலைத்திட்டத்தை தொடக்கி வைத்து உரையாற்றும் போது அவர் இவ்வாறு குறிப்பிட்டார்.

அவர் தொடர்ந்து உரையாற்றம் போது, இந்த நாட்டில் வாழும் சிறுபான்மை சமூகங்களுக்கு நிறையவே பிரச்சினைகளும் தேவைகளும் உள்ளன. இப்பிரச்சினைகளை தீர்க்கக் கூடிய ஒருவரையே எதிர்வரும் ஜனாதிபதித் தேர்தலில் சிறுபான்மை தமிழ், முஸ்லிம் மக்கள் தெரிவு செய்ய வேண்டும்.

கோட்டாபய ராஜபக்ஷ ஜனாதிபதியானால் தமிழ் மக்களினதோ முஸ்லிம் மக்களினதோ பிரச்சினைகளுக்கு தீர்வு கிட்டாது. கோட்டாபய ராஜபக்ஷவை சிறுபான்மை மக்கள் ஆதரிக்க வேண்டும் என்று கூறும் சுயநலவாத சில்லரை அரசியல்வாதிகள் ஆழமாக இதைப்பற்றி சிந்திக்க வேண்டும்.

ஐக்கிய தேசிய கட்சி அரசாங்கம் மற்றும் அக்கட்சியின் சார்பில் ஜனாதிபதி பதவி வகித்த காலங்களிலேயே சிறுபான்மையின மக்களின் பிரச்சினைகளுக்கு அதிகளவு தீர்வு பெற்றுக் கொடுக்கப்பட்டது.

30 வருட கால யுத்தம் முடிவுற்று 10 வருடங்களாகின்ற போதிலும் வட, கிழக்கு வாழ் தமிழ் மற்றும் முஸ்லிம் மக்களின் பிரச்சினைகள் முழுமையாக தீர்க்கப்படவில்லை. நல்லாட்சி அரசாங்கமானது முடியுமான அளவு பிரச்சினைகளுக்கு தீர்வினை பெற்றுக் கொடுத்துள்ளதோடு இன்னும் பல பிரச்சினைகளுக்கு தீர்வுகள் பெற்றுக்கொடுக்கவுள்ளதாகவும் அவர் மேலும் தெரிவித்தார். 3 தசாப்த யுத்தத்திற்கு தீர்வு காணப்பட போதிலும் இனப்பிரச்சினைக்கு அரசியல் தீர்வு இன்னும் கிட்டவில்லை. வடகிழக்கு வாழ் மக்கள் இதையே முக்கியமாக எதிர்பார்க்கின்றனர் எனவும் அவர் தெரிவித்தார்.