7வது நாளாக நல்லூர் பின் வீதியில் தொடரும் உணவு தவிர்ப்புப் போராட்டம்

இன்றைய தினம் 7வது நாளாக நல்லூர் பின் வீதியிலே சுழற்சி முறையில் உணவு தவிர்ப்புப் போராட்டம் நடைபெற்றுக் கொண்டிருக்கின்றது.

வடக்கு கிழக்கு பல்கலைக்கழக மாணவர்கள் மற்றும் சிவில் சமூக அமைப்புக்கள் இணைந்து ஆரம்பித்த இந்த உணவு தவிர்ப்புப் போராட்டம், தற்பொழுது வவுனியா மாவட்ட காணாமல் ஆக்கப்பட்ட உறவினர்களின் பங்களிப்போடு தற்பொழுது நல்லூரிலே சுழற்சி முறையில் நடைபெற்று வருகின்றது.

சிறீலங்கா அரசாங்கத்தை சர்வதேச நீதிமன்றத்தில்  முற்படுத்த வலியுறுத்தி ஐக்கிய நாடுகள் சபையின் கூட்டத் தொடரில் முடிவடையும் வரை உணவு தவிர்ப்புப் போராட்டமானது சுழற்சி முறையில் நடைபெறும் என ஏற்பாட்டாளர்கள் அறிவித்திருக்கிறார்கள்.

அத்தோடு இது ஒட்டுமொத்த தமிழ் மக்களின் உரிமைக்கான பிரச்சினை எனவே அனைத்து உறவுகளும் வந்து இந்த உணவு தவிர்ப்பு போராட்டத்தில் கொடுக்க வேண்டும் என்று வடக்கு கிழக்கு காணாமல் ஆக்கப்பட்ட உறவுகளின் சார்பில் வவுனியா மாவட்ட காணாமல் ஆக்கப்பட்டவர்களின் உறவுகளின் சங்கத்தினர் கோரிக்கை விடுத்துள்ளனர்.

இந்நிலையில், வரலாற்று சந்தர்ப்பத்தை தவற விடாதீர்கள் என்று யாழ்ப்பாணம் மற்றும் கிழக்குப் பல்கலைக்கழக மாணவர்கள் அறைகூவல் விடுத்துள்ளார்கள். சிறீலங்கா அரசாங்கத்தை சர்வதேச நீதிமன்றத்தில்  முற்படுத்துவதற்கு உரிய போராட்டங்களை மேற்கொள்வதற்கான வரலாற்று சந்தர்ப்பம் ஒன்று தமிழ் மக்களுக்கு அதாவது உலக வாழ் தமிழ் மக்களுக்கும் தாயக மக்களுக்கும் கிடைத்திருக்கின்றது.

எனவே அந்த சந்தர்ப்பத்தை தவற விடாமல் தொடர்ச்சியான போராட்டங்களை முன்னெடுத்து சிறீலங்கா அரசாங்கத்தை சர்வதேச குற்றவியல் நீதிமன்றத்தில் பார படுத்த அழுத்தம் கொடுக்கும் போராட்டத்தில் இணைந்து கொள்ளுங்கள் என பல்கலைக்கழக மாணவர்கள் வடக்கு கிழக்கு பல்கலைக்கழக மாணவர்கள் கூட்டாக அழைப்பு விடுத்துள்ளனர்.