7பேர் விடுதலை தொடர்பாக ஆளுநர் மீது அதிருப்தி தெரிவித்த சென்னை உயர் நீதிமன்றம்

இந்திய முன்னாள் பிரதமர் ராஜீவ் காந்தி கொலை தொடர்பாக தண்டனை அனுபவித்து வரும் 7 கைதிகளை விடுவிக்க அரசு நிறைவேற்றிய பரிந்துரை மீது ஆளுநர் இன்னும் முடிவெடுக்காது நீண்ட நாட்களாக நிலுவையில் வைத்திருப்பது ஏன்? என சென்னை உயர் நீதிமன்றம் கேள்வி எழுப்பியுள்ளது.

பேரறிவாளன், நளினி, முருகன் உள்ளிட்ட 7பேர் 29 வருடங்களைக் கடந்தும் சிறையில் இருக்கின்றனர். இதேவேளை பேரறிவாளனுக்கு 90 நாட்கள்  பரோல் வழங்கக் கோரி பேரறிவாளனின் தாயார் தாக்கல் செய்திருந்த மனு மீதான விசாரணை இன்று நடைபெற்றது.

விவாதத்தின் போது ராஜீவ் காந்தி கொலையில் காவல்துறையினர் உட்பட பல அப்பாவி மக்களும் உயிரிழந்துள்ளதை நீதிமன்றம் கருத்தில் கொண்டுள்ளதாக நீதிபதிகள் தெரிவித்தனர். இதேவேளை 29 ஆண்டுகளாக சிறையில் இருப்பவர்களை விடுவிப்பது தொடர்பான பரிந்துரை மீது ஆளுநர் நிராகரிக்கவோ, ஏற்றுக் கொள்ளவோ முழு அதிகாரம் உள்ளது. ஆனால் அதனை நிலுவையில் வைக்கக்கூடாது என்றும்  எல்லாவற்றிற்கும் கால நிர்ணயத்தை அரசியல் சாசனம் வகுத்துள்ளதாகவும் நீதிபதிகள் குறிப்பிட்டனர்.

எதிர்வரும் 29ஆம் திகதிக்குள் அரசும், சிறைத்துறையும் இதற்கான பதிலை வழங்க வேண்டும் என்று உத்தரவிட்டு, வழக்கை ஒத்தி வைத்தனர்.