7தமிழர்கள் விடுதலையை ஆளுநரே முடிவு எடுக்க வேண்டும் – தமிழக முதலமைச்சர் பழனிச்சாமி

ராஜீவ் காந்தி கொலை வழக்கில் தண்டனை பெற்று வரும் 7 தமிழர்கள் தொடர்பில் ஆளுநர் தான் முடிவு எடுக்க வேண்டும் என்று தமிழக முதலமைச்சர் எடப்பாடி பழனிச்சாமி தெரிவித்துள்ளார்.

ராஜீவ் காந்தி கொலை வழக்கில், பேரறிவாளன், முருகன், நளினி, சாந்தன், றொபேட் பயஸ், ஜெயக்குமார், ரவிச்சந்திரன் ஆகியோர் கைது செய்யப்பட்டு மரண தண்டனை விதிக்கப்பட்டு பின்னர் அது ஆயுள் தண்டனையாகக் குறைக்கப்பட்டது. தற்போதும் 7பேரும் சிறையில் தண்டனை அனுபவித்து வருகின்றனர்.

பேரறிவாளன் தண்டனையை நிறுத்தி வைக்குமாறு உச்ச நீதிமன்றத்தில் தாக்கல் செய்த மனு மீதான வழக்கு விசாரணையில் ஆளுநர் நிலுவையில் இரண்டு ஆண்டுகளாக இந்த வழக்கு இருப்பதை ஏற்க முடியாது என்று உச்ச நீதிமன்றம் கருத்துத் தெரிவித்தது.

இதேவேளை இன்று (05) முதலமைச்சர் பழனிச்சாமி கோவையில் செய்தியாளர்களைச் சந்தித்தார். அப்போது அவர் பேரறிவாளன் உட்பட 7 தமிழர்கள் விடுதலைக்காக குரல் கொடுத்தது அதிமுக அரசு, விடுதலை குறித்து அமைச்சரவையில் ஒருமனதாக தீர்மானம் நிறைவேற்றி ஆளுநருக்கு அனுப்பியுள்ளோம். 7பேர் விடுதலை குறித்து ஆளுநர் தான் முடிவெடுக்க வேண்டும் என்று தெரிவித்தார்.

எதிர்கட்சி தலைவர் மு.க. ஸ்டாலின் ஏழு பேர் விடுதலை குறித்து போராட்டம் நடத்தி வருகிறார். அவருக்கு அக்கறை இருந்தால் கடந்த 2000ஆம் ஆண்டிலேயே முன்னாள் முதல்வர் கலைஞரின் ஆட்சியிலேயே செய்திருக்க வேண்டும்.

அன்று ஆட்சியில் இருந்த திமுக அமைச்சரவை வைத்த கோரிக்கையில், நளினிக்கு மட்டும் ஆயுள் தண்டனை வழங்கலாம் என்றும், பிறருக்கு நீதிமன்றத்தில் வழங்கிய தண்டனையை அமுல்ப்படுத்தலாம் என்று கூறினார்கள். இப்போது அரசியலுக்காக ஸ்டாலின் அனைத்தையும் செய்து வருகிறார். அம்மாவின் அரசு விரைவில் அவர்களை விடுதலை செய்யும்.