இலங்கையை தாக்கிய டித்வா புயல்: புத்தளத்தில் 600 இறால் பண்ணைகள் சேதம்!

இலங்கையை தாக்கிய டித்வா சூறாவளியால் புத்தளம் மாவட்டத்தில் மாத்திரம் 600க்கு மேற்பட்ட இறால் பண்ணைகள் சேதமடைந்துள்ளன. இதனால் பல பண்ணையாளர்களின் வாழ்வாதாரம் பாதிக்கப்பட்டுள்ளதாக கடற்றொழில் அமைச்சு தெரிவித்துள்ளது.

புத்தளம் மாவட்டத்திற்கு  கடற்றொழில் அமைச்சர் இராமலிங்கம் சந்திரசேகர் சனிக்கிழமை (06) கள விஜயம் மேற்கொண்டபோதே  இந்த விடயம் தெரிய வந்துள்ளது.

இந்த விஜயத்தின்போது அமைச்சர் பாதிக்கப்பட்ட கடற்றொழிலாளர்கள் மற்றும் பண்ணையாளர்களை நேரடியாகச் சந்தித்து அவர்கள் அனுபவித்த சேதங்கள், உடனடி தேவைகள் மற்றும் எதிர்கால குறைகள் தொடர்பாக விரிவாக கேட்டறிந்தார்.

மாவட்டத்தில் உள்ள இறால் பண்ணையாளர்களின் வாழ்வாதாரத்தை மீட்டெடுக்க அரசாங்கம் உதவி வழங்கும். அண்மையில் பேரழிவால் பாதிக்கப்பட்ட எவரையும் கைவிட மாட்டோம் என அமைச்சர் உறுதியளித்தார்.

மேலும், கடல் அரிப்பு இறால் வளர்ப்பையும் பாதித்துள்ளது தெரியவந்துள்ள நிலையில், கடல் அரிப்பைத் தடுக்க புத்தளம் கடற்கரையில் தடுப்புசுவர் ஒன்றை கட்டுவதற்கான சாத்தியக்கூறுகளை அரசாங்கம் ஆராய்ந்து வருவதாக அமைச்சர் உறுதியளித்தார்.