டியாகோ கார்சியாவில் உள்ள முகாமில் 57 இலங்கையர்கள் போராட்டம்

பிரித்தானிய இந்தியப் பெருங்கடல் பகுதிக்கு சொந்தமான டியாகோ காசியானி தீவில் உள்ள முகாமில் ஒன்றரை வருடங்களாக தடுத்து வைக்கப்பட்டுள்ள 57 இலங்கையர்கள் தம்மை விடுவிக்கக் கோரி உணவுப் பொருட்களைப் பெற்றுக் கொள்ள மறுத்து ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டுள்ளதாகத் தெரிவிக்கப்படுகிறது.

இந்த 57 பேரும் பிரித்தானிய மற்றும் அமெரிக்க கூட்டு முகாமில் அமைக்கப்பட்டுள்ள கூடாரத்தில் தங்கவைக்கப்பட்டுள்ளதாகவும், கூடாரத்தை விட்டு வெளியே செல்ல வேண்டாம் என அச்சுறுத்தப்பட்டதாகவும் தெரிவிக்கப்படுகிறது.

இதன் காரணமாக முகாமில் இருந்த பல இலங்கையர்கள் தற்கொலைக்கு முயன்றதாகவும், அதற்கு முயற்சித்த 5 பேர் ருவாண்டா நாட்டுக்கு அழைத்துச் செல்லப்பட்டதாகவும் கூறப்படுகிறது.

போராட்டத்தில் ஈடுபட்டவர்களில் பத்து பேர் மயங்கி விழுந்ததாகவும் முகாமில் இருந்தவர்கள் எவரும் அதனை கண்டுகொள்ளவில்லை எனவும் முகாமில் உள்ள கைதிகள் வெளிநாட்டு ஊடகமொன்றுக்கு தெரிவித்துள்ளனர்.

மன்னார் பேசாலையில் இருந்து படகில் கனடா நோக்கி பயணித்த போதே இவர்கள் தீவில் சிக்கியுள்ளனர். வழியில் கப்பல் சிதைந்ததாள் அவர்கள் அருகிலுள்ள டியாகோ காசியானி தீவில் தஞ்சமடைந்தனர். அவர்கள் அங்கு பிரித்தானிய-அமெரிக்க முகாமில் தங்கவைக்கப்பட்டனர். கப்பலை சரிசெய்த பின்னர் தம்மை விடுவிக்குமாறு கோரிய போதும் இலங்கையர்கள் 8 மாதங்களாக கூடாரத்தில் தங்க வைக்கப்பட்டுள்ளனர் என்று அவர்கள் கூறுகிறார்கள்.

எவ்வாறாயினும், தமது உறவினர்களை தொலைபேசி ஊடாக அவ்வப்போது அழைப்பதற்கு சந்தர்ப்பம் வழங்கப்பட்டதாகவும், வெளிநாட்டு ஊடகங்களுக்கு தெரிவித்துள்ளனர். எனினும், கடந்த 19ஆம் திகதி முதல், கூடாரத்திற்குள் உணவு பெற மறுத்து, தம்மை விடுவிக்குமாறும் அல்லது பொது மக்கள் வாழும் பகுதிக்கு அனுப்புமாறும் கோரியும் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர்.

இந்த முகாம் இலங்கைக்கு தெற்கே சுமார் 2,500 கிலோமீற்றர் தொலைவில் அமைந்துள்ளது. இவர்களை விடுவிப்பது தொடர்பாக பிரித்தானிய அரசாங்கத்துடன் பேச்சுவார்த்தை நடத்தப்பட்டு வருவதாக வெளிவிவகார அமைச்சு வட்டாரங்கள் சுட்டிக்காட்டுகின்றன. இதேவேளை, குறித்த மக்களை மீட்பதற்கு தேவையான நிதி மற்றும் சட்ட உதவிகளை வழங்கும் சர்வதேச வேலைத்திட்டம் ஒன்று ஆரம்பிக்கப்பட்டுள்ளதாக வெளிநாட்டு ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.