54 வெளிநாட்டவர் ஈஸ்டர் தாக்குதலில் சம்பந்தம் – யாருமே தப்ப முடியாது என்கின்றார் பீரிஸ்

“உயிர்த்த ஞாயிறு தாக்குதல்களுடன் தொடர்பில் அரசாங்கம் உள்நாட்டில் மாத்திரமல்ல வெளிநாட்டிலும் முழுமையான விசாரணைகளை நடத்தியுள்ளது. 54 வெளிநாட்டவரை அரசாங்கம் சம்பவத்துடன் தொடர்பு டையவர்களாக அடையாளம் கண்டுள்ளது” என கல்வி அமைச்சர் பேராசிரியர் ஜீ.எல்.பீரிஸ் தெரிவித்தார்.

பாராளுமன்றத்தில் நேற்று புதன்கிழமை இடம்பெற்ற உயிர்த்த ஞாயிறு தாக்குதல் தொடர்பிலான ஜனாதிபதி ஆணைக்குழுவின் விசாரணை அறிக்கை மீதான 4ஆம் நாள் விவாதத்தில் கலந்துகொண்டு உரையாற்றும் போதே இவ்வாறு தெரிவித்த அவர் மேலும் பேசுகையில்,

“மாவனல்லை சம்பவம் தொடர்பில் உரிய விசாரணைகளை நடத்தியிருந்தால் உயிர்த்த ஞாயிறு தாக்குதலை தடுத்திருக்க முடியும். இந்த பாரிய அழிவு ஏற்பட்டிருக்காது. மாவனல்லை சம்பவத்தின் பின்னர் பலர் கைதுசெய்யப்பட்டனர். ஆனால், துர்திஷ்டவசமாக அவர்கள் மீண்டும் விடுதலை செய்யப்பட்டனர். இதற்கு பொறுப்புக்கூற வேண்டியது யார்?

இப்போதுள்ள சாட்சியங்களின் பிரகாரம் அத்தருணத்தில் இந்தச் சம்பவம் தொடர்பில் பொறுப்புக்கூற வேண்டிய பொலிஸ் அதிகாரிகளுக்கு எதிராக சட்ட நடவடிக்கைகளை எடுக்க முடியும். கைதுசெய்யப்பட்டவர்களை விடுதலை செய்யுமாறு அரசியல் உத்தரவுகள் ஏதும் வழங்கப்பட்டுள்ளதா என்றும் விசாரணைகளை முன்னெடுக்க முடியும்.

உயிர்த்த ஞாயிறு தாக்குதல் தொடர்பிலான ஜனாதிபதி ஆணைக்குழுவின் அறிக்கையை நடைமுறைப்படுத்துவதில் அரசு, நீதித்துறை மற்றும் சட்ட மாஅதிபர் திணைக்களம் ஆகியவை இணைந்து செயற்பட்டால்தான் மக்கள் தெளிவடைவார்கள். . 99 பேர் சம்பவத்துடன் தொடர்புடையதான குற்றச்சாட்டில் கைதுசெய்யப்பட்டுள்ளனர். 36 விசாரணைகள் முழுமைப்படுத்தப்பட்டுள்ளன.

ஆணைக்குழுவின் அறிக்கையில் நபர்கள், சம்பவங்கள், இடங்கள் தொடர்பில் தெளிவான சாட்சியங்கள் உள்ளன.வனாத்த வில்லுவில் கண்டறியப்பட்ட ஆயுதங்கள் தொடர்பில் தெளிவான சாட்சியங்கள் உள்ளன. 26ஆயிரம் வாள்கள் தொடர்பில் ஆராயுமாறு கர்தினல் மேன் முறையீட்டு நீதிமன்றம் சென்றிருந்தார். இதற்காக தற்போது இரண்டு பொலிஸ் குழுக்கள் அமைக்கப்பட்டு விசாரணை செய்யப்பட்டு வருகின்றது.. சுங்கத் திணைக்களத்தின் ஊடாக 26 ஆயிரம் வாள்களை நாட்டுக்குள் கொண்டுவருவது இலகுவான காரியமல்ல. இதற்காக அரசியல் உத்தரவுகள் ஏதும் பிறப்பிக்கப்பட்டுள்ளதா எனக் கண்டறிய வேண்டும்.

விடுதலைப் புலிகளால்கூட இரண்டு, மூன்று மணித்தியாலங்களில் கொழும்பு முதல் மட்டக்களப்பு வரை 8 குண்டுத் தாக்குதல்களை நடத்த கூடியதாக இருக்கவில்லை. இவ்வாறான தாக்குதல்களை நடத்த வேண்டுமென்றால் மாதக்கணக்கில் அல்ல வருடக்கணக்கில் திட்டமிட வேண்டும். இந்த வலையமைப்பை உருவாக்க நிதியை வழங்கியது யார்?. ஆகவே, அரசாங்கம் உள்நாட்டில் மாத்திரமல்ல வெளிநாட்டிலும் முழுமையான விசாரணைகளை நடத்தியுள்ளது. 54 வெளிநாட்டவரை அரசாங்கம் சம்பவத்துடன் தொடர்பு டையவர்களாக அடையாளம் கண்டுள்ளது.

தாக்குதல்களுடன் தொடர்புடையவர்களுக்கு தண்டனை வழங்குவதுடன், எதிர்காலத்தில் இவ்வாறான சம்பவங்கள் நடைபெறாத வண்ணம் தீர்மானங்களை எடுக்க வேண்டும். பெட்டோ என்ற துருக்கி நாட்டின் நிறுவனமொன்றின் ஊடாக நிதி கிடைக்கப்பெற்றுள்ளது. இந்நிறுவனம் ஆளும் அரசாங்கத்துக்கு எதிரான நிறுவனமென அடையாளப்படுத்தப்பட்டுள்ளது. 36 முழுமைப்படுத்தப்பட்ட விசாரணை அறிக்கைகள் சட்ட மாஅதிபர் திணைக்களத்துக்கு அனுப்பட்டுள்ளன. சட்ட மாஅதிபர் திணைக்களம்தான் வழக்குத் தாக்கல் தொடர்பிலான நடவடிக்கைகளை எடுக்க வேண்டும். அரசின் பக்கத்தில் அனைத்து பணிகளும் இடம்பெற்றுள்ளன. குற்றப்பத்திரிக்கையை தாக்கல் செய்ய சாட்சியங்கள் போதுமா என்பதை சட்ட மாஅதிபர்தான் தீர்மானிக்க வேண்டும்.

எத்தகைய அதிகாரம் மிக்க நபராகவிருந்தாலும் அல்லது எத்தகைய அதிகாரங்களை அவர் கொண்டிருந்தாலும் அவர் இந்த சம்பவத்துடன் தொடர்புப்பட்டிருந்தால் அரசாங்கம் அவரை காப்பாற்றாதென பொறுப்புடன் கூறுகிறேன். எந்தவொரு சந்தர்ப்பத்திலும் அரசாங்கம் இந்த விடயத்தில் தலையிடாது. விசாரணைகள் நடத்துவது மாத்திரமே அரசாங்கத்தின் பொறுப்பு. ஏனைய செயற்பாடுகளை சட்ட மாஅதிபர் திணைக்களம்தான் முன்னெடுக்க வேண்டும். எந்தவொரு நபருக்கு எதிராக நடவடிக்கை எடுக்குமாறும் அல்லது நடவடிக்கை எடுக்க வேண்டாமென்றும் நாம் சட்ட மாஅதிபருக்கு உத்தரவுகளை பிறப்பிக்க மாட்டோம்” என்றார்.