52% ஏற்றுமதிக்கு ஆபத்து! இலங்கைத் தேயிலைத் துறையை முடக்கும் மத்திய கிழக்கு போர் : மருதன் ராம்

இலங்கையின் பொருளாதார முதுகெலும்பாகத் திகழும் தேயிலைத்துறை, தற்சமயம் ஒரு பாரிய சர்வதேச நெருக்கடியைச் சந்திக்கக் கூடும் என்று அச்சம் உருவாகியுள்ளது. தற்போது மத்திய கிழக்கில், குறிப்பாக ஈரான், இஸ்ரேல் மற்றும் அமெரிக்கா ஆகிய நாடுகளுக்கு இடையே தீவிரமடைந்துள்ள மோதல்கள், இலங்கையின் ‘சிலோன் டீ’ (Ceylon Tea) வர்த்தகத்தில் கடும் அதிர்வலைகளை ஏற்படுத்தியுள்ளன.
புவியியல் ரீதியாக இலங்கை இப்போரில் நேரடியாக ஈடுபடாவிட்டாலும், உலகளாவிய விநியோகச் சங்கிலி மற்றும் எரிசக்தி சந்தை ஊடாக இலங்கை மிக மோசமான பாதிப்புகளை எதிர்கொண்டுள்ளது. இலங்கை தேயிலை ஏற்றுமதியில் மத்திய கிழக்கு மற்றும் வட ஆபிரிக்க பிராந்தியங்கள் மிக முக்கியமான பங்கைக் கொண்டுள்ளன.
தேசிய தேயிலை தோட்ட கம்பெனிகளின் உரிமையாளர்கள் சங்கத்தின் தலைவர் சமன் கீகனகே வெளியிட்டுள்ள தரவுகளின்படி 2023 மற்றும் 2024 ஆம் ஆண்டுகளில் இலங்கையின் மொத்த தேயிலை உற்பத்தி யில் 52% மத்திய கிழக்கு மற்றும் வட ஆபிரிக்க நாடுகளுக்கே ஏற்றுமதி செய்யப்பட்டுள்ளது. இலங்கை யின் மொத்த வருடாந்த உற்பத்தி சுமார் 256 மில்லியன் கிலோகிராம் ஆகும்.
இதில் பாதியளவு ஒரு குறிப்பிட்ட பிராந்தியத்தைச் சார்ந்து இருப்பது, தற்போதைய போரினால் ஏற்படும் பாதிப்பின் தீவிரத்தை உணர்த்துகிறது. நாட்டின் மொத்த உற்பத்தியில் 65% சிறு  தேயிலை தோட்ட உரிமையாளர்களால் வழங்கப்படுகிறது. இப்போரினால் இவர்களின் வாழ் வாதாரமே தற்போது கேள்விக்குறியாகியுள்ளது.
2025 ஆம் ஆண்டில் சுமார் 43 மில்லியன் கிலோகிராம் தேயிலையை இறக்குமதி செய்த 10 முக்கிய சந்தைகள் தற்போதைய மோதலால் நேரடியாகப் பாதிக்கப்பட்டுள்ளன. ஒட்டுமொத்தமாக 70% ஏற்றுமதி வாய்ப்புகள் அச்சுறுத்தலுக்கு உள்ளாகியுள்ளன. குறிப்பாக இலங்கைக்கும் ஈரானுக்கும் இடையிலான வர்த்தக உறவில் ‘பண்டமாற்று’ முறை ஒரு முக்கிய அங்கமாகும். குறிப்பாக, ஈரானிடம் இருந்து பெற்ற எரிபொருள் கடனுக்காக தேயிலையை வழங்கும் ஒப்பந்தம் சர்வதேச சந்தையில் இலங்கை தேயிலையின் விலையை நிலையாக வைத்திருக்க உதவியது.
தற்போதைய போர் சூழலால் இந்த ஒப்பந்தம் தற்காலிகமாக இடைநிறுத்தப்பட்டுள்ளதாக இலங்கை தேயிலைத் தோட்ட கம்பெனிகளின் உரிமையாளர் தரப்பு தெரிவிக்கின்றது. இது இலங்கைத் தேயிலைக்கான போட்டித் தன்மை மிக்க விலையை இழக்கச் செய்துள்ளதுடன், ஈரான் போன்ற ஒரு பாரிய கொள்வனவாளரை இலங்கை இழக்கும் அபாயத்தையும் ஏற்படுத்தியுள்ளது.
மத்திய கிழக்கில் ஏற்பட்டுள்ள பதற்றம் உலகளா விய கடல்சார் வர்த்தகப் பாதைகளில் பாரிய மாற்றங்களை ஏற்படுத்தியுள்ளது. பாரசீக வளைகுடாவின் முக்கிய நுழை வாயிலான ஹார்முஸ் நீரிணையில் ஏற்பட்டுள்ள பதற்றம் காரணமாக, கப்பல் போக்குவரத்து கடுமையாகக் குறைந்துள் ளது. ஐரோப்பா மற்றும் வட அமெரிக்கா செல்லும் கப்பல் கள் சுயஸ் கால்வாயைத் தவிர்த்து, ஆபிரிக்காவின் ‘நன்னம்பிக்கை முனையை’ (Cape of Good Hope) சுற்றிச் செல்கின்றன. இதனால் பயண நேரம் அதிகரிப்பதோடு, எரிபொருள் செலவும் உயர்ந்துள்ளது.
காப்புறுதி நிறுவனங்கள் மத்திய கிழக்கு பிராந் தியத்திற்கான காப்புறுதி கட்டமைப்புகளை பன்மடங்கு உயர்த்தியுள்ளன. சில நிறுவனங்கள் சேவைகளையே நிறுத்தியுள்ளன. இது ஏற்றுமதியாளர்களுக்கு மேலதிக நிதிச் சுமையை ஏற்படுத்தியுள்ளது. இவ்வாறான நிலை இலங்கை யின் தேயிலை சந்தையை கேள்விக்குள்ளாகியுள்ளது.
கொழும்பு தேயிலை ஏல விற்பனையில் ஏற்பட்டுள்ள சரிவு
2026 பெப்ரவரி மற்றும் மார்ச் மாத தரவுகள் தேயிலை சந்தையின் மந்தநிலையைத் தெளிவாகக் காட்டுகின்றன. கடந்த பெப்ரவரி மாதத்தில் தேசிய தேயிலை ஏல சராசரி விலை ஒரு கிலோவிற்கு 1,152.11 ரூபாவாகக் குறைந்ததாக சந்தை தரவுகள் தெரிவிக்கின்றன.
இது கடந்த ஜனவரி மாதத்துடன் ஒப்பிடுகையில் 12.43 ரூபா சரிவாகும். மத்திய கிழக்கு நாடுகளுக்கு அதிகம் ஏற்றுமதி செய்யப்படும் தாழ் நிலத் தேயிலை விலை ஜனவரியை விட பெப்ரவரி மாதத்தில் ஒரு கிலோவிற்கு 26.38 ரூபாவால் சரிவைச் சந்தித்துள்ளது.
அதேபோன்று மத்திய நிலத் தேயிலையும் கணிசமான சரிவைச் சந்தித்துள்ளது. தரமான பாரம்பரிய தேயிலை என்று கூறப்படும் மலைநாட்டு தேயிலைக்கான தேவை காரணமாக இந்த வகை மட்டும் ஓரளவு ஸ்திரத் தன்மையைப் பேணுவதாக ஏல விற்பனை தரகர்கள் கூறுகின்றனர்.
இவ்வாறு தேயிலையின் விலை சரிவடைந்து செல்லும் போக்கு நிலவுகின்ற அதே சூழலில் மறுபுறம் ஏல விற்பனையில் விற்பனையாகாத தேயிலை யின் அளவு 15-18% ஆக அதிகரித்துள்ளது. இது தேயிலை தொழிற்சாலைக ளின் பணப்புழக்கத்தைப் பாதித்துள்ளதாக தேயிலைத் தோட்ட தொழிற்சாலை உரிமையாளர்கள் குறிப்பிடுகின்றனர்.
தேயிலைத் துறையில் ஏற்பட்டுள்ள முடக்கம் நேரடியாக காணக்கூடிய தாக்கத்தை இதுவரையில் ஏற்படுத்தாவிட்டாலும் ஒரு சங்கிலித் தொடர் அடிப்படை யில் விளைவை ஏற்படுத்த தொடங்கியுள்ளது. இதனடிப் படையில் குறைந்த ஏல விலை மற்றும் போதிய ஏற்றுமதி வாய்ப்பின்மை காரணமாக, சிறு தோட்ட விவசாயிகளுக்கு வழங்கப்படும் ‘கொழுந்து கிலோ ஒன்றுக்கான விலை’ குறைக்கப்பட்டுள்ளது.
அதேநேரம் ஏப்ரல் மாதத்தில் சித்திரை புத்தாண்டு வரவுள்ள நிலையில், தொழிலாளர்களுக்கு முன்பணமும் கொடுப்பனவுகளும் வழங்க வேண்டிய கட்டாயத்தில் தொழிற்சாலைகள் உள்ளன. ஆனால், தேயிலை விற்பனையாகாதது நிதி நெருக்கடியைத் தோற்று வித்துள்ளது. உலக சந்தையில் மசகு எண்ணெய் விலை உயர்வால், உள்நாட்டில் மின்சாரம், போக்குவரத்து மற்றும் உரச் செலவுகள் அதிகரிக்கக் கூடிய அச்சமும் நிலவுகிறது.
மாற்றுத் திட்டங்களும் பரிந்துரைகளும்
இந்த இக்கட்டான சூழ்நிலைகளை கையாள்வதற்காக நிபுணர்கள் சில முக்கிய ஆலோசனைகளை முன்வைக் கின்றனர். மாற்று சந்தை வாய்ப்பு என்ற அடிப்படையில் மத்திய கிழக்கை மட்டும் சார்ந்திராமல் கிழக்கு ஆசியா அவுஸ்திரேலியா மற்றும் பசுபிக் பிராந்திய நாடுகளுக்கு ஏற்றுமதியை விரிவுபடுத்த வேண்டும். தற்போதைய சூழலில் இந்தப் பாதைகள் பாதுகாப்பாக உள்ளன என்று நிபுணர்கள் சுட்டிக்காட்டியுள்ளனர்.
ஏற்றுமதி நடைமுறைகளை விரைவுபடுத்தவும், காப்புறுதிச் சுமைகளைக் குறைக்கவும் அரசாங்கம் தலையிட வேண்டும் என்றும் அவர்கள் கோரியுள்ளனர். தேயிலைத் துறை சரிவதைத் தடுக்க அரசாங்கம் ஒரு விசேட நிதிப் பொதியை அல்லது அவசரகால திட்டத்தை அறிமுகப்படுத்த வேண்டும் என்றும் வலியுறுத்தியுள்ளனர்.
மூலப் பொருட்களாக தேயிலையை ஏற்றுமதி செய்வதற்குப் பதிலாக, முடிவுற்ற தயாரிப்புகளாக மாற்றி அதிக இலாபத்தைப் பெற முயற்சி செய்யலாம் என்றும் பொருளாதார நிபுணர்கள் தங்களது பரிந்துரைகளை முன் வைத்துள்ளதாக பெருந்தோட்ட நிறுவனங்கள் கூறுகின்றன.
மத்திய கிழக்கில் நீடிக்கும் போர் பதற்றம் என்பது வெறும் அரசியல் மோதல் மட்டுமல்ல, அது இலங்கையின் பல்லாயிரக்கணக்கான தேயிலை தோட்ட தொழிலாளர்களின் வாழ்வாதாரத்தை பாதிக்கும் ஒரு பொருளாதாரப் பேரழிவாகும். 52% சந்தை வாய்ப்பு அச்சுறுத் தலுக்கு உள்ளாகியுள்ள நிலையில், இலங்கை அரசாங்கமும் தேயிலை சபையும் மிகத் துரிதமாகச் செயற்பட வேண்டியது அவசியமாகும். சர்வதேச சந்தையை பல்வகைப்படுத்துவதும், உள்நாட்டு உற்பத்தியாளர்களைப் பாதுகாப்பதும் மட்டுமே ‘சிலோன் டீ’ இன் புகழைத் தக்கவைப்பதற்கான ஒரே வழியாகும்.