50 மாணவர்களுக்கு குறைவாகவுள்ள பாடசாலைகளை அபிவிருத்தி செய்ய தீர்மானம்!

அரசாங்க பாடசாலைகள் மூடப்பட மாட்டாது என்றும் 50 மாணவர்களுக்கு குறைவாக உள்ள பாடசாலைகளை அபிவிருத்தி செய்வதற்கு அரசாங்கம் தீர்மானித்துள்ளதாகவும்  கல்வி, உயர்கல்வி பிரதியமைச்சர் மதுர செனவிரத்ன தெரிவித்தார்.

பாராளுமன்றத்தில்  செவ்வாய்க்கிழமை (05) வாய்மூல விடை க்கான கேள்வி நேரத்தில், ரவி கருணாநாயக்க எம்பி எழுப்பிய கேள்வி ஒன்றுக்கு பதிலளிக்கும் போதே இவ்வாறு தெரிவித்தார்.

அது தொடர்பில் அவர் மேலும் தெரிவிக்கையில்,

பாடசாலைகள் தொடர்பில் தீர்மானங்களை மேற்கொள்ளும் போது மக்கள் பிரதிநிதிகள், பிரதேச ஒருங்கிணைப்புக்  குழு, பிரதேச செயலாளர், கிராம சேவை உத்தியோகத்தர்கள் என அனைவரும் ஒன்றிணைந்தே தீர்மானங்கள்  மேற்கொள்ளப்படுகின்றன.

அவ்வாறு தீர்மானங்களை மேற்கொள்ளும் சந்தர்ப்பங்களில் சில வேளைகளில் 50 மாணவர்களுக்கும் குறைவான எண்ணிக்கை உள்ள  பாடசாலைகளை நடத்திச் செல்வது தொடர்பிலும் ஆராயப்படும்.

தற்போதைய அரசாங்கம் கல்விக்கான சந்தர்ப்பங்களை விரிவுபடுத்த வேண்டும் என்ற நோக்கத்திலேயே செயற்படுகிறது.பாடசாலைகளை மூடி விடுவது நோக்கம் அல்ல.

அத்துடன் பாடசாலைகளை நடத்திச் செல்லும் நடவடிக்கைகளை கல்விய மைச்சினால் மட்டும் முன்னெடுத்துச் செல்ல முடியாது.அனைத்து தரப்பினரதும் ஒத்துழைப்பு அவசியமாகும்  என்றார்.