முன்னாள் புலனாய்வுப் பிரிவின் பிரதானி சுரேஷ் சலே மீதான 5 பிரதான குற்றச்சாட்டுகள்!

கடந்த 25 ஆம் திகதி குற்றப் புலனாய்வுத் திணைக்களத்தால் (CID) கைது செய்யப்பட்ட முன்னாள் புலனாய்வுப் பிரிவின் பிரதானி, ஓய்வுபெற்ற மேஜர் ஜெனரல் சுரேஷ் சலேக்கு எதிராக முன்வைக்கப்பட்டுள்ள ஐந்து பிரதான குற்றச்சாட்டுகள் குறித்த தகவல்கள் வெளியாகியுள்ளன.

உயிர்த்த ஞாயிறு தற்கொலை குண்டுத் தாக்குதல் தொடர்பான சதித்திட்டம் மற்றும் சாட்சியங்களை மறைக்கும் செயன்முறையில் அவர் தொடர்புபட்டிருப்பதாக  காவல் துறையினர் சந்தேகிக்கின்றனர்.

இந்தக் கைது நடவடிக்கைக்கு அடிப்படையான காரணங்கள் வருமாறு:

1. இராணுவப் புலனாய்வுப் பிரிவின் உறுப்பினர் ஒருவர் ஊடாக, சந்தேகத்திற்கிடமான இளைஞர் குழுவைப் பயன்படுத்தி நீர்கொழும்பு பகுதியில் உள்ள தேவாலயங்கள் குறித்த இரகசியத் தகவல்களைத் திரட்டியமை.

2. சாய்ந்தமருது வெடிப்புச் சம்பவத்தில் ‘சாரா ஜாஸ்மின்’ என்பவர் உயிரிழந்ததாக ஒரு தவறான கருத்தை உறுதிப்படுத்த நேரடியாகத் தலையிட்டமை மற்றும் அவர் குறித்த தகவல்களை மறைத்தமை.

3. தாக்குதல் நடத்தியவர்கள் குறித்த தகவல்கள் வௌியாகும் சந்தர்ப்பத்தில், அவற்றை மூடிமறைக்கவும் விசாரணைகளுக்கு இடையூறு விளைவிக்கவும் நேரடியாகவோ அல்லது மறைமுகமாகவோ தலையிட்டமை.

4. சூத்திரதாரிகள் அடையாளம் காணப்படுவதைத் தடுப்பதன் மூலம் பயங்கரவாத நடவடிக்கைகளுக்கு உடந்தையாக இருந்தமை.

5. ஒட்டுமொத்தத் தாக்குதல் தொடரின் திட்டமிடலில் குற்றவியல் சதித்திட்டமொன்றிற்குப் பங்களிப்பு வழங்கியமை.

பேலியகொடை பகுதியில் வைத்துக் கைது செய்யப்பட்ட முன்னாள் புலனாய்வுப் பிரிவின் பிரதானி, தற்போது பயங்கரவாதத் தடைச் சட்டத்தின் (PTA) கீழ் மூன்று நாள் தடுப்புக் காவல் உத்தரவின் அடிப்படையில் குற்றப் புலனாய்வுத் திணைக்களத்தின் பொறுப்பில் உள்ளார்.

அவரிடம் முன்னெடுக்கப்படும் விசாரணைகளின் ஊடாக வௌியாகும் தகவல்களைக் கொண்டு, உயிர்த்த ஞாயிறு தாக்குதலின் மேலதிகப் பின்னணிகளைக் கண்டறிய மேலதிக விசாரணைகள் முன்னெடுக்கப்படும் என சிரேஷ்ட பொலிஸ் அதிகாரி ஒருவர் மேலும் தெரிவித்தார்.