சிறிலங்காவின் 4வது உலகத்தமிழராய்ச்சி மாநாட்டுப் பண்பாட்டு இனஅழிப்பு விடுதலைப் போராட்ட வித்தாகி 49 ஆண்டுகள் – மூத்த அரசியல் ஆய்வாளர் சூ.யோ. பற்றிமாகரன்

உலகத் தமிழாராய்ச்சி மாநாடு படுகொலை நினைவு நாள் | உதயன் | UTHAYAN

ஈழத்தமிழர் வரலாற்றில் யாழ்ப்பாணத்தில் 1974 சனவரி 9 முதல் 10 வரை நடைபெற்ற நான்காவது உலகத் தமிழாராய்ச்சி மாநாடு சிறிலங்காவின் பண்பாட்டு இனஅழிப்பாக முடிவுற்றதால் ஈழத்தமிழ் மக்களின் தேசிய விடுதலை நோக்கிய அரசியல் வரலாற்று மாற்றத்தை ஏற்படுத்திய நிகழ்வாக நிறைவு பெற்றது.

நான்காவது உலகத் தமிழாராய்ச்சி மாநாடு என்பது 22.05. 1972இல் சிறிலங்கா சிங்கள பௌத்த குடியரசு என்னும் சிங்கள அரசியல் தலைமைகளின் தன்னிச்சையுடன் அரசியலமைப்புப் பிரகடனத்தால் அரசற்ற தேச இனமாக்கப்பட்டதால் தங்களின் மக்கள் இறைமை தங்களிடமே மீண்டதன் பின்னர் ஈழத்தமிழர்கள் தங்களின் தாயக தேசிய தன்னாட்சி ஒருமைப்பாட்டை உலகுக்கு வெளிப்படுத்த நடாத்திய முதலாவது பண்பாட்டுப் பெருவிழாவாக அமைந்தது.

வடக்கு கிழக்குத் தாயகம் ஒருங்கிணைந்து தங்கள் தாய்மொழியாம் ஈழத்தமிழ்மொழியின் தனித்துவத்தை உலகுக்கு உணர்த்தும் வரலாற்று கலை இலக்கிய மற்றும் கண்காட்சி நிகழ்வுகளுடன் இம்மாநாடு ஈழத்தமிழ் தேசிய எழுச்சிப் பெருவிழாவாகக் கட்டமைக்கப்பட்டது.

இந்த ஈழத்தமிழ்ப் பண்பாட்டின் தனித்துவ வெளிப்பாட்டைத் தடுப்பதற்கு கொழும்பில் இம்மாநாட்டை அன்றைய சிறிலங்காவின் பிரதமர் சிறிமாவோ பண்டாரநயாக்காவின் தலைமையில் கலைவிழாவாக நடாத்துவதற்குச் சிறிலங்கா சுதந்திரக்கட்சியின் அன்றைய தபால்தந்தித்துறை அமைச்சரான செல்லையா குமாரசூரியரும், சிறிலங்காச் சுதந்திரக் கட்சியின் யாழ்ப்பாண மாநகர முதல்வாரன அல்பிரட் தங்கராசா துரையப்பாவும் இணைந்து எடுத்த முயற்சிகளை மாநாட்டு அமைப்பாளர்கள் ஏற்க மறுத்து யாழ்ப்பாண அரசுக் காலம் முதலாக ஈழத்தமிழர்களின் கலாச்சார மையமாக யாழ்ப்பாணம் இருப்பதால் அங்கு உலகமாநாட்டடை நடாத்த முடிவெடுத்தனர்.

இது ஈழத்தமிழர்கள் தங்கள் பண்பாட்டின் தொன்மையையும் தொடர்ச்சியையும் ஈழமக்களே மீள் உற்பத்தி செய்யும் மக்கள் நிகழ்வாக உணர்ச்சி வேகம் பெற்றது. யாழ்ப்பாண நன்னகரின் வீதிகள் முதல் குச்சு ஒழுங்கைகள் வரை முழுவதும் அலங்கார வளைவுகளும் கண்கவர் சோடனைகளும் நிறைந்த கலைக்கோலங்களாகக் காட்சி அளித்தன. தென்னங்கன்றுகளும் வாழைமரங்களும் நடப்பட்டு யாழ்ப்பாணமே பசுஞ்சோலையாக மக்களால் அலங்கரிக்கப்பட்டது.

மாவிலை தோரணங்களும் வாயில் தோறும் கும்பங்களும் மலர்ச்சோடனைகளும் மின்விளக்குகளும் சுடர் விளக்குகளும் ஒளிவீசி இரவைப் பகலாக்கின. மங்கள இசையுடன் கூடிய இன்ன்pசைகளின் பரவலாலும் ஆலயங்கள் எங்கும் ஆலய மணியோசைகளாலும் பள்ளிகள் தோறும் மாணவர் கொண்டாட்டங்களாலும் எங்கும் மகிழ்ச்சி வெள்ளம் பாய்ந்தோடும் தமிழ்ப் பண்பாட்டு நகராக யாழ்ப்பாணத்தை மாற்றி மக்கள் அக்களித்து அகமகிழ்ந்தனர். ஒக்கலித்து தமிழ் முழக்கமிட்டனர்.

இந்நிலையில் இந்த மாநாட்டின் ஊர்வலத்திற்கும் இந்த மாநாட்டின் இறுதிநாள் கலைநிகழ்ச்சியினை யாழ்ப்பாணத்தின் மாநகரசபையின் திறந்த வெளியரங்கில் நடாத்தவும் அனுமதியினை வழங்க மாநகர முதல்வர் துரையப்பா வழங்க மறுத்து சிறிலங்கா சுதந்திரக்கட்சியின் தலைவியான நாட்டின் பிரதமர் சிறிமாவோ பண்டாரநாயக்காவால் கொழும்பில் மாநாட்டைத் தொடக்கி வைக்க உலகத்தமிழராய்ச்சி அமைப்பாளர்கள் மறுத்தமைக்கான அரசியல் பழிவாங்கலைச் செய்தார்.

ஆயினும் மக்கள் தங்களிடம் இறைமை மீண்டுவிட்ட நிலையில் தாங்களே தங்களின் மக்கள் பலம் கொண்டு ஊர்வலத்தை மிகச் சிறப்பாக நடாத்திய வேளையில் ஊர்வலம் போகும் பாதைகளில் மின்சாரத்தைத் தங்காலிகமாக நிறுத்தி உதவ மாநகர மின்சார நிலையத்தினர் மறுத்தமையால் மின் கம்பிகளில் அலங்கார வாகனங்களில் ஒன்றின் உயரமான வளைவு முட்டியதில் மின்சாரம் பாய்ந்து இருவர் பலியாகிய துயரசம்பவம் மாநாட்டின் பெருமகிழ்ச்சிக்கு கரும்புள்ளி போல் அமைந்தது.

ஆயினும் மக்களின் ஒருமைப்பாடும் மொழிப்பற்றும் தொடர்ந்தும் மாநாடு தடையின்றி தனியார் மண்டபமான வீரசிங்கம் மண்டபத்தில் வெற்றிகரமாகத் தொடர உதவியது. இந்த இருவரது பண்பாட்டுப்பேணலுக்கான உயிர் அர்ப்பணிப்பு மேலும் உத்வேகத்தை மக்களுக்கு அளித்தது.

மாநாட்டின் இறுதி நிகழ்வான கலைநிகழ்ச்சிகளுடன் நன்றி தெரிவிக்கும் விழாவுக்கு மக்கள் பெருந்திரளாகத் திரண்டு வந்தமையால் யாழ்ப்பாணம் றீகல் திரையரங்கிற்கு அருகில் வீரசிங்கம் மண்டபத்தினர்க்கு இருந்த முற்றத்தில் மேடையமைத்து இறுதி நிகழ்வை அமைப்பாளர்கள் நடாத்தினர். ‘எங்கள் வாழ்வும் எங்கள் வளமும் மங்காத தமிழென்று சங்கே முழங்கு’ என்னும் புரட்சிக்கவிஞன் பாரதிதாசன் அவர்களின் கவிதா வரிகளைத் தமிழகத்தின் திருச்சி ஜமால் கல்லூரியின் தமிழ்ப்பேராசியர் நைனா முகம்மது அவர்கள் தன் உரையில் குறிப்பிட்டுப் பேசிக் கொண்டிருக்கும் பொழுது, வீரசிங்கம் மண்டபத்துக்கு வெளியே இருந்த மின்கம்பத்தின் மின்சாரக் கம்பிகளை நோக்கி துப்பாக்கிச் சன்னங்கள் தீர்க்கப்படுவதையும் இதனால் தீப்பொறிகளை வீசிக்கொண்டு அறுந்து வீழ்ந்த மின்சாரக்கம்பிகளின் மின்னொழுக்கால் ஒன்பது பேர் உயிரிழந்ததையும், அமைதியாக அமர்ந்து இருந்த மக்களின் தலைகளின் மேல் நடந்து வந்த சிறிலங்காப் பொலிசார் மக்களை அடித்து நொறுக்கி, மேடையில் பாய்ந்து அங்கு பேச்சாளராகக் கலந்து கொண்டிருந்த தமிழக அரசியல் தலைவர்களில் ஒருவரான ஜனார்த்தனம் அவர்களைக் கைது செய்ய முயன்றதையும், ஆனால் அவர் மேடையில் இருந்த ஒரு கத்தோலிக்கக் குரு தனது மேலாடையைக் கொடுத்து அவரைக்காப்பாற்றி வெளியே அனுப்பி வைத்ததையும் வரலாறு பதிவாக்கியது.

மாநாட்டில் கலந்து கொண்டிருந்த தமிழ்ப்பெண்களை நிர்வாணப்படுத்தி அவமானப்படுத்தும் செயலில் வீரசிங்கம் மண்டபத்தின் உள்ளும், தெருக்களிலும் பொலிசார் ஈடுபட்ட வேளையில் அதனைத் தடுத்து நிறுத்தத் தங்களின் ஆடைகளைப் பெண்களின் மேல் போர்த்திய இளையவர்களையும், டாக்சிச் சாரதிகள் பலரையும் பொலிசார் படுபயங்கரமாகத் தாக்கியதையும், மக்கள் எந்தத் திசையில் ஒடுவதென்றில்லாது தறிகெட்டு ஓடியதையும் இளைஞர்களும் டாக்சிச் சாரதிகளும் இயலுமானவரை பெண்களையும் சிறுவர்களையும் தங்கள் வாகனங்களில் ஏற்றித் தூரத்தில் கொண்டு போய் பாதுகாப்பாக விட முயற்சித்ததையும், இதனைத் தடுக்கும் முகமாகப் பொலிஸ் வாகனங்களில் அருகிருந்த வீதிகளில் ஓடிஓடி பொலிசார் மக்களைத் தாக்கியதையும் அந்த இரவு வரலாறாகப் பதிவு செய்தது.

இந்த திட்டமிட்ட முறையிலான சிறிலங்காவின் பண்பாட்டு இனஅழிப்பு நோக்கிலான அரசபயங்கரவாதச் செயலே அப்பொழுது அரசியல் விழிப்புணர்வுள்ள இளைய தலைமையாக வளர்ந்து கொண்டிருந்த தேசியத் தலைவர் வேலுப்பிள்ளை பிரபாகரன் அவர்கள் தலைமையில் ஈழத்தமிழ் மக்கள் தங்கள் உயிரையும் உடமைகளையும் நாளாந்த வாழ்வையும் பாதுகாக்க ஆயுத எதிர்ப்பை வெளிப்படுத்தும் நியாயமான நீதிக்கான ஆயுதப் போராட்டமான தமிழீழத் தேசிய விடுதலைப்போராட்டத்தை தொடங்க வைத்தது.

அப்பாவி மக்கள் 11 பேரின் இனஅழிப்புக்குக் காரணமாக இருந்த அரசியல்வாதிகளும் துப்பாக்கிப் பிரயோகத்திற்கு கட்டளையிட்ட பொலிஸ் உதவி ஆணையாளரும் தண்டனை நீதி பெறவைக்கும் முயற்சிகள் மக்களால் முன்னெடுக்கப்பட்டன. இதன் வழி மக்கள் இறைமை தனக்கான தேசியப்பாதுகாப்பையும் அமைதியையும் வளர்ச்சிகளையும் ஏற்படுத்தும் நடைமுறை அரசு ஒன்று படிப்படியாக வளர்ச்சி பெற்று 1978 முதல் 2009 வரை 31 ஆண்டுகள் ஈழத்தமிழர்களால் நடைமுறை அரசு ஒரு அரசுக்குரிய அத்தனை தன்மைகளுடனும் நடைமுறைப்படுத்தப்பட்ட வரலாற்றின் வித்தாக 11 ஈழத்தமிழரை இனஅழிப்புச் செய்த 4வது உலகத் தமிழாராய்ச்சி மாநாட்டு இனப்படுகொலை அமைந்தது.

இன்று இந்த இனப்படுகொலைகளின் அரைநூற்றாண்டு அடுத்த வருடம் சனவரி 10 இல் தொடங்க இருக்கின்ற நேரத்தில் அன்று போலவே இன்றும் பண்பாட்டு இனஅழிப்பு ஈழத்தமிழர்களின் இறைமையை ஒடுக்குவதற்கான சிறிலங்கா அரசின் அரசியல் கொள்கையாகவும் கோட்பாடாகவும் தொடர்ந்து கொண்டே இருக்கிறது. 146000 ஈழத்தமிழர்களை முள்ளிவாய்க்காலில் இனஅழிப்புக்குள்ளாக்கி அவர்களின் நடைமுறை அரசை சிறிலங்கா ஆக்கிரமித்த பின்னரான கடந்த பதின்முன்று ஆண்டுகளிலும் ஈழத்தமிழரின் பண்பாட்டு இனஅழிப்பு தொல்லியல் ஆய்வுக்கான முயற்சிகள் என்ற பெயரில் இராணுவத் தலைமைகளாலும் பௌத்த பிக்குகளாலும் சட்டங்கள் முறைமைகளை மீறி அப்பட்டமான குற்றச் செயலாக குருந்தூர்மலை முதல் திருக்கோணேஸ்வரம் வரை புத்தசிலைகளை நிறுவுதல் முதல் வழிபாட்டுச் சுதந்திரங்களை மறுப்பது வரை தொடர்ந்து கொண்டிருக்கிறது.

இந்நிலையில் ஈழத்தமிழர்களின் இன்றைய அரசியல்வாதிகள் பண்பாட்டு இனஅழிப்பு தொடர்கிறதென உலகநாடுகளிடமும் உலக அமைப்புக்களிடமும் முறையிட்டுத் தமிழரின் தொன்மையும் தொடர்ச்சியுமான பண்பாட்டைப் பேணுங்கள் தமிழர்களின் வரலாற்று இடங்களையும் ஆலயங்களையும் உலகப் பண்பாட்டுப் பேணுகைக்கு கீழ் கொண்டுவருவதற்கான அனைத்துலகச் சட்டங்களையும் முறைமைகளையும் ஒழுங்குகளையும் எடுங்கள் என கோரிக்கைகளை முன்வைத்தலும், உலகத் தமிழர்களாக வாழ்ந்து கொண்டிருக்கிற ஈழத்தமிழர்களும் தமிழகத் தமிழர்களும் இணைந்து இதற்கு உதவுவதும் இனமானமுள்ள தமிழினத்தின் இன்றைய காலத்தேவையாகிறது.