இந்தியாவின் செகந்திராபாத் விமானப் படைக்கல்லூரியின் 46 ஆவது இந்திய உயரிய வான் கட்டளை கற்கையினைச் சேர்ந்த 19 இந்திய பாதுகாப்பு படை அதிகாரிகள் கப்டன் யுனூஸ் சயீட் முஷாபர் தலைமையில் பயணம் ஒன்றை மேற்கொண்டுள்ளனர்.
2023 மார்ச் 20 முதல் 24 ஆம் திகதி வரையில் இலங்கையில் தந்திரோபாய ஆய்வொன்றினை மேற்கொள்வதற்காகவே இவ்வாறு வருகை தந்துள்ளனர்.
இந்த விஜயத்தின்போது மூத்த பாதுகாப்பு அதிகாரிகளை சந்தித்து உரையாடும் இக்குழுவினர் தமது பயிற்சியின் இலக்கினை மேலும் விரிவுபடுத்தும் நோக்குடன் இராணுவ ஸ்தாபானங்கள் மற்றும் நிறுவனங்களுக்கும் பயணம் செய்யவுள்ளமை குறிப்பிடத்தக்கது.
பத்தரமுல்லையில் உள்ள இந்திய அமைதிகாக்கும் படையினரின் நினைவுத்தூபியில் அஞ்சலி செலுத்தி இலங்கைக்கான தமது விஜயத்தை ஆரம்பித்த இந்த அதிகாரிகள், இலங்கைக்கான இந்திய உயர் ஸ்தானிகர் கோபால் பாக்லே, முப்படைகளின் பிரதானி ஜெனரல் சவேந்திர சில்வா, இலங்கை விமானப்படைத்தளபதி ஏர் மார்ஷல் எஸ்.கே.பத்திரண ஆகியோரையும் சந்தித்திருந்தமை குறிப்பிடத்தக்கது.
அத்துடன் இலங்கை குறித்த ஆழமான உள்ளீடுகளைப் பெற்றுக்கொள்ளும் நோக்குடன் இக்குழுவினர் காலி, அம்பாந்தோட்டை, தியத்தலாவை, கண்டி மற்றும் கட்டுநாயக்கா ஆகிய இடங்களுக்கு விஜயம் மேற்கொண்டு பல்வேறு தரப்பினரையும் சந்திக்கவுள்ளனர்.
இந்தியாவின் அயலுறவுக்கு முதலிடம் கொள்கையானது இந்தியா மற்றும் இலங்கை ஆகிய இரு நாடுகளினதும் ஆயுதப் படையினர் இடையிலான நிறுவக ரீதியான உறவுகளை மேம்படுத்துவதனை இலக்காகக்கொண்டுள்ளது.
அத்துடன் இவ்வாறான ஆய்வுசார் விஜயங்கள் பிராந்திய சமாதானம், பாதுகாப்பு மற்றும் ஸ்திரத்தன்மையினை எட்டுவதற்காக இருநாட்டு மக்களிடையிலுமான தொடர்பினை மேம்படுத்தும் அதேநேரம் இரு தரப்பினரிடையிலும் காணப்படும் தோழைமைப் பிணைப்பினயும் மேலும் வலுவாக்க உதவுகின்றமை குறிப்பிடத்தக்கது.