கூடாரம் காவல்துறையால் அகற்றப்பட்டுள்ள நிலையிலும் போராட்டத்தை தொடரும் மக்கள்

593 Views

ஜனநாயக ரீதியாகவும் அமைதியான முறையிலும் மாமாங்கேஸ்வரர் ஆலயத்திற்கு முன்பாக சுழற்சி முறையிலான உண்ணா விரத போராட்டம் முன்னெடுக்கப் பட்டுவரும் நிலையில், இன்று அதிகாலை போராட்டம் நடைபெறும் இடத்தில் அமைக்கப்பட்டிருந்த கூடாரமும் அங்கிருந்த பதாகைகள் உட்பட பல பொருட்கள் அகற்றப்பட்டுள்ளதாக அருட்தந்தை க.ஜெகதாஸ் தெரிவித்தார்.

சர்வதேசத்திடம் நீதிகோரி சுழற்சி முறையில் முன்னெடுக்கப்பட்டுவரும் போராட்டம் 10வது நாளாகவும் இன்றும் மட்டக்களப்பு மாமாங்கேஸ்வரர் ஆலயத்திற்கு முன்பாக நடைபெற்றது.

IMG 0138 கூடாரம் காவல்துறையால் அகற்றப்பட்டுள்ள நிலையிலும் போராட்டத்தை தொடரும் மக்கள்

மட்டக்களப்பு காவல்துறையினர் இன்று அதிகாலை எந்தவித முன்னறிவித்தலும் இன்றி போராட்டம் நடாத்தப்பட்ட கூடாரங்கள் மற்றும் அங்கிருந்த பொருட்கள் அகற்றப்பட்ட நிலையில் உச்சி வெயில் கறுப்பு குடைகளை ஏந்தி இந்த போராட்டத்தில் ஈடுபட்டனர்.

காணமல் ஆக்கப்பட்டவர்களின் உறவினர்கள், அரசியல் கட்சிகளின் பிரதிநிதிகள், பொது அமைப்புகளின் பிரதிநிதிகள் இதில் கலந்துகொண்டனர்.

இன்று அதிகாலை தாங்கள் போராட்டம் நடாத்தும் இடத்தில் அமைக்கப்பட்டிருந்த கூடாரங்கள் அகற்றப்பட்ட நிலையில், அது தொடர்பில் இன்று மட்டக்களப்பு  காவல்துறை  நிலையத்தில் முறைப்பாடு ஒன்றினை பதிவுசெய்ய சென்ற வேளை குறித்த கூடாரத்தினை தாங்கள்தான் அகற்றியதாக தெரிவித்ததாகவும் அருட்தந்தை க.ஜெகதாஸ் தெரிவித்தார்.

IMG 0131 கூடாரம் காவல்துறையால் அகற்றப்பட்டுள்ள நிலையிலும் போராட்டத்தை தொடரும் மக்கள்

நீதிமன்ற கட்டளைக்கு அமைவாகவே குறித்த கூடாரங்களை அகற்றியதாக குறித்த பொலிஸ் நிலைய பொறுப்பதிகாரியினால் தங்களிடம் தெரிவிக்கப்பட்டதாகவும் அருட்தந்தை தெரிவித்தார்.

எனினும் குறித்த நீதிமன்ற கட்டளை தொடர்பில் எந்தவித அறிவிப்புகளும் தமக்கு வழங்கப்படாமல் எந்தவித முன்னறிவித்தலும் வழங்கப்படாமல் ஒருதலைப் பட்சமாக இது அகற்றப்பட்டுள்ளதாகவும் அவர் தெரிவித்தார்.

தாங்கள் இப்பகுதியில் போராட்டம் நடாத்துவதற்கு எதிரான முழுமையான தடையுத்தரவினைப்பெற்றுள்ளதாக தெரிவித்தபோதிலும் அந்த தடையுத்தரவினை காவல்துறை இதுவரையில் தங்களுக்கு காட்டவில்லையெனவும் அவர் தெரிவித்தார்.

எங்களுக்கு எந்தவித அறிவிப்பும் வழங்கப்படாமல் குறித்த கூடாரத்தினை அகற்றிய விடயமானது சட்ட விரோதமானது என காவல் நிலையில் முறைப்பாடு ஒன்றினை பதிவுசெய்துள்ளோம் எனவும் அருட்தந்தை க.ஜெகதாஸ் தெரிவித்தார்.

ஆனாலும் சாத்வீக ரீதியான,அமைதியான முறையில் முன்னெடுக்கப்படும் நீதிகோரிய அனைத்து தடைகளையும் தாண்டி தொடர்ந்து முன்னெடுக்கப்படும் எனவும் அவர் தெரிவித்தார்.

நாங்கள் எந்தவொரு நோக்கத்திற்காகவும் இங்கு போராடவில்லை,எங்களது உறவுகளுக்கு என்ன நடந்தது, எங்களுக்கு நடந்த அநீதிகளுக்கு நீதிகேட்டே இந்த போராட்டத்தினை முன்னெடுத்துவருவதாக மட்டக்களப்பு மாவட்ட வலிந்து காணாமல் ஆக்கப்பட்டோர் சங்கத்தின் தலைவி அ. அமலநாயகி தெரிவித்தார்.

IMG 0124 கூடாரம் காவல்துறையால் அகற்றப்பட்டுள்ள நிலையிலும் போராட்டத்தை தொடரும் மக்கள்

இன்றைய தினம் நாங்கள் போராட்டம் நடாத்தும் கூடாரங்களை அகற்றிச் சென்றள்ளமையானது இந்த நாட்டில் நீதி செத்துவிட்டு என்பதையும் அநீதி தலைவிரித்தாடுவதையும் காட்டுவதாகவும் இதன்காரணமாக இந்த சுடும் வெளியிலும் இலங்கையினை சர்வதேச நீதிமன்றில் நிறுத்தவேண்டும் என்பதற்காக போராடி வருவதாகவும் அவர் தெரிவித்தார்.

கடந்த 11வருடங்களாக நாங்கள் பலவித போராட்டங்களை முன்னெடுத்துவரும் நிலையிலும் பல்வேறு அச்சுறுத்தல்கள் போராட்டங்களில் ஈடுபட்டுள்ளவர்களுக்கு விடுக்கப்பட்டுவரும் நிலையில் தாங்கள் தொடர்ச்சியாக போராட்டங்களை முன்னெடுத்து வருவதாகவும் அவர் தெரிவித்தார்.

பல மனித உரிமைகள் செயற்பாடுகள் முன்னெடுக்கும் அமைப்புகள் உள்ளபோதிலும் தங்களுக்கு இழைக்கப்படும் அநீதிகளை தட்டிக் கேட்பதற்கு எவரும் முன்வரவில்லையெனவும் மட்டக்களப்பு மாவட்ட வலிந்து காணாமல் ஆக்கப்பட்டோர் சங்கத்தின் தலைவி அ.அமலநாயகி தெரிவித்தார்.

எங்களுக்கு நடக்கும் இவ்வாறான அநீதிகளுக்கு நீதிகேட்கவேண்டிய இந்த அமைப்பினர் இன்று மௌனித்துப்போயிருப்பதாகவும் அவர் குற்றஞ்சாட்டினார்.

மக்களால் தெரிவுசெய்யப்பட்ட நாடாளுமன்ற உறுப்பினர்களும் தங்களது போராட்டங்களுக்கு பாராமுகமாக இருப்பதாகவும் ஆயிரக்கணக்கானவர்கள் முன்பாக வீரவசனங்களை பேசுகின்றீர்கள், ஆனால் இந்த போராட்டத்தில் நாங்கள் ஈடுபட்டுவரும் நிலையில் உங்கள் வீர வசனங்களை காணமுடியவில்லை.

நாங்கள் யாரின் தலைமீதும் ஏறி போராட்டம் நடாத்தவில்லை, வீதியில் செல்வோருக்கு இடையூறின்றியே போராடி வருகின்றோம். இது எங்களின் நாடு என்றால் நாங்கள் வீதியில் போராடும் உரிமை எங்களுக்கு இருக்கின்றது. அவ்வாறு நாங்கள் போராட்டம் நடாத்தமுடியாது என்றால் இந்த நாட்டில் எவ்வாறு நாங்கள் நீதியை எதிர்பார்க்கமுடியும் என்பதை சர்வதேச சமூகம் இனியாவது புரிந்துகொள்ளவேண்டும் என்றார்.

Leave a Reply