4 தமிழ்க் கட்சி தலைவர்கள் யாழ்ப்பாணத்தில் சந்திப்பு; ஏனைய கட்சிகளையும் இணைக்க முடிவு

227 Views

தமிழ் மக்களின் பிரச்சினைகளுக்குத் தீர்வு காணும் செயற்பாடுகளில் தமிழ்த் தேசியக் கட்சிகள் அனைத்தையும் ஓரணியில் இணைத்துச் செயற்படுவது தொடர் பில் யாழ்ப்பாணத்தில் இன்று நடைபெற்ற கட்சித் தலைவர்களின் கூட்டத்தில் 4 கட்சிகளின் தலைவர்கள் பங்கேற்றனர். ஏனைய கட்சிகளையும் இணைத்துக்கொண்டு இப்பேச்சுக்களைத் தொடர்வதற்கு இதன்போது தீர்மானிக்கப்பட்டது.

யாழ்ப்பாணம், நான்காம் குறுக்குத் தெருவிலுள்ள உள்ள ரெலோவின் அலுவலகத்தில் இன்று மாலை 4.00 மணி முதல் 5.30 வரை இந்தச் சந்திப்பு இடம்பெற்றது. இதில் இலங்கைத் தமிழரசுக் கட்சியின் தலைவர் மாவை சேனாதிராஜா, புளொட் தலைவர் தர்மலிங்கம் சித்தார்த்தன், ரெலோவின் தலைவர் செல்வம் அடைக்கலநாதன், ஈ.பி.ஆர்.எல்.எப். தலைவர் சுரேஷ் பிரேமச்சந்திரன் ஆகியோர் பங்கேற்றுள்ளனர்.

ரெலோவின் தலைவர் செல்வம் அடைக்கலநாதனின் ஏற்பாட்டில் நடைபெறும் இந்தக் கூட்டத்துக்கு தமிழ்த் தேசியக் கட்சிகளின் தலைவர்கள் அனைவருக்கும் அழைப்பு விடுக்கப்பட்டிருந்தது. எனினும், ஏனைய கட்சிகளின் தலைவர்களான சி.வி.விக்னேஸ்வரன், கஜேந்திரகுமார் பொன்னம்பலம், என்.சிறிகாந்தா, அனந்தி சசிதரன் மற்றும் பொ.ஐங்கரநேசன் உள்ளிட்டோர் இந்தக் கூட்டத்தில் பங்கேற்கவில்லை.

அவர்களுடன் தனித் தனியாகப் பேச்சுக்களை நடத்துவதற்கு நேற்றைய கூட்டத்தில் தீர்மானிக்கப்பட்டது. அதன்படி எதிர்வரும் நாட்களில் ஏனைய கட்சிகளுடன் பேசுவதற்குத் தீர்மானிக்கப்பட்டுள்ளது. பாராளுமன்றக் கூட்டத் தொடரில் கலந்துகொள்வதற்காக சி.வி.விக்னேஸ்வரன், கஜேந்திரகுமார் ஆகியோர் கொழும்பு சென்றிருப்பதால், அவர்கள் யாழ்ப்பாணம் திரும்பிய பின்னர் அவர்களைச் சந்திப்பதற்கும் தீர்மானிக்கப்பட்டது.

ஏற்கனவே ஒன்பது கட்சிகளிடையே இணக்கப்பாடு ஏற்படுத்தப்பட்ட போது தமிழரசுக் கட்சியே அதனைக் குழப்பியது என நேற்றைய கூட்டத்தில் தெரிவித்த சுரேஷ் பிரேமச்சந்திரன், தமிழரசுக் கட்சி உண்மையாகவே ஒற்றுமையை விரும்புகின்றதா? என தமிழரசுக் கட்சித் தலைவர் மாவை சேனாதிராஜாவிடம் இதன்போது கேள்வி எழுப்பினார். இதற்குப் பதிலளித்த தமிழரசுக் கட்சித் தலைவர், ஒற்றுமை முயற்சிக்கு முழுமையாக ஒத்துழைக்கத் தயாராகவிருப்பதாகத் தெரிவித்தார்.

Leave a Reply