தாயகத்தில் முதல் பெண் மாவீரர் மாலதியின் நினைவு நாள் அஞ்சலி…

08 தாயகத்தில் முதல் பெண் மாவீரர் மாலதியின் நினைவு நாள் அஞ்சலி...

தமிழீழ விடுதலைப் புலிகள் அமைப்பில் வீரமரணமடைந்த முதல் பெண் போராளி மாலதியின் 38 வது நினைவேந்தல் நிகழ்வு வெள்ளிக்கிழமை (10)  மாலை மன்னார் ஆக்காட்டி வெளியில் அமைந்துள்ள அவரது இல்லத்தில் இடம்பெற்றது.

குடும்ப உறவுகளால் ஏற்பாடு செய்யப்பட்ட குறித்த நினைவேந்தல் நிகழ்வில் மாந்தை மேற்கு பிரதேச சபையின் தவிசாளர், அருட்தந்தை, முன்னாள் போராளிகள், உறவினர்கள் ,உள்ளடங்களாக பலர் கலந்து கொண்டனர்.

இதன் போது அவரது உருவப்படத்திற்கு பொதுச் சுடர் ஏற்றப்பட்டு ,மாலை அணிவித்து மலர் தூவி அஞ்சலி செலுத்தப்பட்டது.

இந்த நிலையில், தமிழீழ பெண்கள் எழுச்சி நாளை முன்னிட்டு, ஈழ விடுதலைப் போராட்டத்தின் முதல் பெண் மாவீரரான 2ஆம் லெப்டினன்ட் மாலதி அவர்களின் 38ஆம் ஆண்டு நினைவேந்தல் நிகழ்வு கிளிநொச்சியில் சிறப்பாக நினைவுகூரப்பட்டது.

இலங்கை தமிழ் அரசுக் கட்சியின் கிளிநொச்சி மாவட்டக் கிளையின் ஏற்பாட்டில், பாரதிபுரம் வட்டாரத்துக்குட்பட்ட சூசைப்பிள்ளை கடைச் சந்தியில் இந்த நிகழ்வு வெள்ளிக்கிழமை (10) எழுச்சியுடன் நடைபெற்றது.

நிகழ்வில் நாடாளுமன்ற உறுப்பினரும் இலங்கை தமிழ் அரசுக் கட்சியின் நாடாளுமன்றக் குழுத் தலைவருமான சிவஞானம் சிறீதரன் கலந்து கொண்டு, 2ஆம் லெப்டினன்ட் மாலதியின் தியாகமும் வீரமும் நிறைந்த வாழ்க்கையை நினைவுகூர்ந்து உரையாற்றினார்.

தவிசாளர்கள், உபதவிசாளர்கள், பிரதேச சபை உறுப்பினர்கள், கட்சி உறுப்பினர்கள் மற்றும் பொதுமக்கள் பலரும் கலந்து கொண்டு அஞ்சலி செலுத்தினர்.