இலங்கைக்கு 38,000 மெட்ரிக் தொன் எரிபொருள் : இந்தியாவுக்கு ஜனாதிபதி நன்றி தெரிவிப்பு!

இலங்கையில் ஏற்பட்டுள்ள எரிபொருள் நெருக்கடியை சமாளிக்க துரிதமாக 38,000 மெட்ரிக் தொன் எரிபொருளை வழங்கியமைக்கு இந்திய பிரதமர் நரேந்திர மோடி மற்றும் இந்திய வெளிவிவகாரத்துறை அமைச்சர் எஸ். ஜெய்சங்கர் ஆகியோருக்கு ஜனாதிபதி அநுரகுமார திஸாநாயக்க தனது நன்றியைத் தெரிவித்துள்ளார்.

ஜனாதிபதி தனது உத்தியோகபூர்வ எக்ஸ் வலைத்தளத்தில் வெளியிட்ட பதிவில் இதனை குறிப்பிட்டுள்ளார்.

மத்திய கிழக்கு பகுதியில் நிலவும் மோதல்களின் விளைவாக இலங்கை எதிர்கொண்டுள்ள எரிபொருள் விநியோகத் தடைகள் குறித்து சில நாட்களுக்கு முன்னர் இந்திய பிரதமர் நரேந்திர மோடியுடன் கலந்துரையாடியதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.

இந்தியாவின் விரைவான மற்றும் துரிதமான ஆதரவிற்கு தனது ஆழ்ந்த நன்றிகளைத் தெரிவித்துக் கொண்ட ஜனாதிபதி, நேற்று 38,000 மெட்ரிக் தொன் எரிபொருள் கொழும்பை வந்தடைந்துள்ளதாகவும் குறிப்பிட்டுள்ளார்.

மேலும், இந்த ஒத்துழைப்பில் முக்கிய பங்கு வகித்த இந்திய வெளிவிவகாரத்துறை அமைச்சர் எஸ். ஜெய்சங்கருக்கும் தனது மனமார்ந்த நன்றிகளை ஜனாதிபதி தெரிவித்துள்ளார்.