நானாட்டான் நாணயங்கள்  நாக மன்னர் வெளியிட்டவையே; அவற்றில் தமிழ் பிராமி எழுத்துக்கள் காணப்படுகின்றன- பேராசிரியர் சி.பத்மநாதன்

யாழ்ப்பாணக் குடா நாட்டை நாகதீபம் என்று மகாவம்சம் குறிப்பிடும். ஆனால் அது உள்ளடங்கிய வடமாகாணப் பகுதிகளை நாகநாடு என்று மணிமேகலை குறிப்பிடுகின்றது. நாகர் செறிந்து வாழ்ந்தமையாலும், ஆட்சி அதிகாரம் செலுத்தியமையாலும் இப்பெயர்கள் உருவாகின. நாகதீபத்து அரசர்கள் பற்றி மகாவம்சம் பதிவு செய்வனவாகவும் இங்கு குறிப்பிடவேண்டியவை.

நாகநாடு என்பது சிலர் கருதுவதைப் போல ஒரு தனி அரசாக அமைந்திருக்கவில்லை. அங்கே வேள்புலங்கள் பலவாகியிருந்தன. வேள் என்ற பதவிப் பெயரை அவர்கள் அனைவரும் பெற்றிருந்தனர். அவர்களிலே கந்தரோடை, பூநகரி தெற்கு, வன்னி ஆகியவற்றில் அதிகாரம் செலுத்தியவர்கள் பலமானவர்கள்; பிரசித்தமானவர்கள்.

உற்பற்திப் பெருக்கமும் பொருள் வளமும் அதற்கான காரணங்கள். இந்த மூன்று பிரதேசங்களிலும் ஆட்சி புரிந்த நாகர் கி.மு மூன்றாம் நூற்றாண்டு முதலாக நாணயங்களை வெளியிட்டனர். அவற்றிலே வேள் ணாகன் என்ற பட்டப்பெயர் அடங்கிய வாசகம் அமைந்திருக்கும். கந்தரோடையிற் கிடைத்த அச்சுக்குத்திய நாணயமொன்றில் இதனைக் காணமுடிகின்றது. அது கி.மு மூன்றாம் நூற்றாண்டுக்கு உரியது.

நானாட்டானில் 1904 நாணயங்கள் ஒரே இடத்திலும், ஒரே சமயத்திலும் கிடைத்துள்ளன. இலங்கை நாணயவியல் வரலாற்றில் இது ஓர் அதிசயம். இவற்றுள் பல்வேறு காலங்களைச் சேர்ந்த தமிழ் அரசர்கள் வெளியிட்ட உருப்படிகள் பெரும்பாலானவை என்பது மற்றொரு அதிசயம். யாழ்ப்பாணத்து ஆரியச் சக்கரவர்த்திகளின் சேது நாணயங்களும் அவற்றில் அடங்கும்.

Capture 1 நானாட்டான் நாணயங்கள்  நாக மன்னர் வெளியிட்டவையே; அவற்றில் தமிழ் பிராமி எழுத்துக்கள் காணப்படுகின்றன- பேராசிரியர் சி.பத்மநாதன்

விரிவுரையாளர் கிரிதரன் முகநூல் வழியாக வெளியிட்ட புகைப்படங்களில் இரண்டு தனிச்சிறப்புடையவை. செப்பு நாணயங்களாகிய அவற்றில் மீனுருவங்கள் காணப்படுகின்றன. ஒன்றில் இணைக்கயல் வடிவம் தெரிகின்றது. மீன் வடிவங்கள் வனப்புடன் வார்க்கப்பட்டுள்ளன. முதலாவது உருப்படியில் உள்ளதைப் போன்ற சின்னம் பொறித்த நாணயங்களைப் பாண்டியப் பேரரசர் பிற்காலத்தில் வெளியிட்டனர்.

அவர்களின் பேரரசு எட்டாம் நூற்றாண்டில் உருவாகியதன் பின்னர் அவை வெளியிடப்பட்டன. நானாட்டானிற் கிடைத்த இணைக்கயல் வடிவம் பொறித்த நாணயம் மிகப் புராதனமானது; இதுவரை கிடைத்தவற்றுடன் அதுவே காலத்தால் முற்பட்டது. ப.புஸ்பரட்ணம் பூநகரியிலே கண்டெடுத்த இரு மீன் பொறித்த நாணயங்கள் வேறு விதமானவை; அவற்றிலே மீன் ஒவ்வொன்றும் எதிரான திசையினை நோக்கியவாறு அமைந்த கோலம் தெரிகின்றது; நானாட்டானிற் கிடைத்த  உருப்படி ஒரு தனி வகையானது. இதனைப் போன்ற வேறொரு நாணயம் இதுவரை கிடைக்கவில்லை.

இரண்டாவது நாணயம் வோறொரு வகையானது. அதில் மூன்று மீன்களின் உருவங்கள் தெரிகின்றன. அவற்றிலே தமிழ்ப் பிராமி வடிவங்களில் தமிழில் வாசகம் எழுதப்பட்டுள்ளது. ‘’வேண ணாகம் பொலம்’’ என்ற வாசகம் தெளிவாகத் தெரிகின்றது. எழுத்துகள் சிறியவை நெருக்கமானவை. ஈழத்து நாகரின் வழமைப்படி அது பல வரிகளில் எழுதப்பட்டுள்ளது. ஒவ்வொரு வரியிலும் இரண்டு மூன்று தடவைகள் அது அமைக்கப்பட்டுள்ளது.

இந்த முறை பரத கண்டத்திலோ தென்னிலங்கையிலோ காணப்படாத வழமை. அதனை உணராதமையினாலே பலருக்கும் தடுமாற்றம் ஏற்படுகின்றது. இந்த நாணயத்தில் வேள் ணாகன் பொலம் என்ற வாசகம் மேல் வருமாறு அமைந்துள்ளது.

‘’வேள் ணாகன் பொலம்’’ என்ற தொடரில் மூன்று  சொற்கள் உள்ளன. முதலாவது சிற்றரசருக்குரிய பட்டப் பெயர்; இனக்குழு ஒன்றின் பெயர் பொலம் என்பது பொன்னைக் குறிக்கும். ஆனால் அது ஆகுபெயராகிய இங்கு நாணயத்தைக் குறிக்கும் வகையிற் பயன்படுத்தப்படுகின்றது.

பெருங்கற் பண்பாட்டுச் சின்னங்களில் மீன் வடிவங்கள் சிறப்பானவை. அவை இரு விதங்களிற் பதிவு செய்யப்பட்டுள்ளன. சில வடிவங்கள் கோட்டுருவ வடிவில் அமைந்தவை. இந்த வடிவம் பாண்டியர் வெளியிட்ட ஆதியான நாணயங்களிற் காணப்படும். இன்னொரு வகையான மீன் சின்னம் முழுமையான மீன் வடிவமாகும்.

Capture 6 நானாட்டான் நாணயங்கள்  நாக மன்னர் வெளியிட்டவையே; அவற்றில் தமிழ் பிராமி எழுத்துக்கள் காணப்படுகின்றன- பேராசிரியர் சி.பத்மநாதன்

இலங்கையில் இரு வகையான வடிவங்களும் சின்னங்களாகப் பயன்படுத்தப்பட்டுள்ளன. வட இலங்கையிலே குறிப்பாகப் பூநகரியில் பேராசிரியர் ப.புஷ்பரட்ணம் பெற்றுள்ள அதிகமான காசுகளில் மீன்களின் முழுமையான வடிவங்கள் கூடுதலாக உள்ளன. சிலவற்றில் இரு மீன் வடிவங்களும் வேறு சிலவற்றில் மூன்று மீன் உருவங்களும் பதிவாகி உள்ளன. (2002 : 186-187)

உறுகுணையிற் கிடைத்த பழங்காசுகளில் முன்பு குறித்த இரு வகையான வடிவங்களும் காணப்படுகின்றன. பரசுதிஸ என்பவன் வெளியிட்ட உருப்படி ஒன்றில் கோட்டுருவமான மீன் வடிவங்கள் தெரிகின்றன. (வோப்பே ஆராய்ச்சி 1999 : 53) ஆனாலும் திஸமகராமவில் கிடைத்த  வேறு சில நாணயங்களில் முழுமையான மீன் வடிவம் தெரிகின்றது. (1999 : 54, 57, 58) அவற்றில் ஒன்று நாகன் ஒருவனால் வெளியிடப்பட்டமை (நாக3) கவனத்திற்குரியது.

Capture 3 1 நானாட்டான் நாணயங்கள்  நாக மன்னர் வெளியிட்டவையே; அவற்றில் தமிழ் பிராமி எழுத்துக்கள் காணப்படுகின்றன- பேராசிரியர் சி.பத்மநாதன்

எனவே மீன் உருவங்களை இரு வேறு வடிவங்களில் வெளியிடும் வழமைக்குப் பெருங்கற் காலப் பண்பாடே மூலமானது என்று கருதமுடிகின்றது.