யாழில் சீரற்ற வானிலையால் 297 பேர் பாதிப்பு!

யாழ்ப்பாணத்தில் கடந்த ஒரு வாரகால மழையால் 86 குடும்பங்களைச் சேர்ந்த 297 பேர் பாதிக்கப்பட்டுள்ளதுடன், 9 வீடுகள் பகுதியளவில் சேதமடைந்துள்ளன. பாதிக்கப்பட்டவர்களுக்காக ஓர் இடைத்தங்கல் முகாம் அமைக்கப்பட்டுள்ளது என யாழ். மாவட்டச் செயலாளர் தெரிவித்தார்.

இடர் பாதிப்புக்களைத் தணிப்பது மற்றும் எதிர்கொள்வது தொடர்பான அவசர முன்னாயத்தக் கலந்துரையாடல் வடக்கு மாகாண  ஆளுநர் நா.வேதநாயகன்  தலைமையில்   ஆளுநர் செயலகத்தில் நடைபெற்றது. இதன்போதே இவ்விடயம் சுட்டிக்காட்டப்பட்டது.

வடக்கு மாகாணத்தின் பராமரிப்பிலுள்ள 54 குளங்களில் 52 குளங்களின் நீர்மட்டம் 25 சதவீதத்துக்கும்; குறைவாகவே உள்ளது. 300 மில்லி மீற்றருக்கும் அதிகமான மழை பெய்தால் மட்டுமே வான்பாயும் நிலை ஏற்படும் என மாகாண நீர்ப்பாசனப் பணிப்பாளர் தெரிவித்தார். இதேநேரம் கடல் நீர்மட்டம் இன்னமும் உயர்வடையாமையர், யாழ். மாவட்டத்தின் 3 தடுப்பணைகளும் திறக்கப்பட்டுள்ளன என்றும் குறிப்பிட்டார்.

அதே நேரம் மீட்புப் பணிகளுக்காக முப்படையினர் தயார் நிலையிலுள்ளதாகத் தெரிவித்தனர்.  இடர் காலத்தில் பிரதேச செயலகங்கள் மற்றும் மாவட்டச் செயலகங்கள் 24 மணி நேரமும் மக்களுக்கு உதவும் வகையில் தயார் நிலையில் இருக்க வேண்டும் என ஆளுநர் கேட்டுக்கொண்டார்.