வெளிநாடுகளில் வைத்து 29 முக்கிய நபர்கள் கைது

இலங்கைக்குள் போதைப்பொருட்களைக் கடத்தும் சர்வதேச வலையமைப்பை முறியடிக்கும் நோக்கில் அரசாங்கம் முன்னெடுத்த விசேட நடவடிக்கையில், அந்த வலையமைப்புடன் தொடர்புடைய 29 முக்கிய குற்றவாளிகள் கைது செய்யப்பட்டுள்ளதாக பொது மக்கள் பாதுகாப்பு பிரதி அமைச்சர் சுனில் வட்டகல தெரிவித்துள்ளார்.

திருகோணமலையில் இடம்பெற்ற நிகழ்வொன்றில் உரையாற்றிய அவர், இந்தக் கைது நடவடிக்கைகள் குறித்த முக்கிய தகவல்களைப் பகிர்ந்து கொண்டார்.

இதன்படி, குற்றப்புலனாய்வுத் திணைக்கள அதிகாரிகள் இந்தோனேசியா, நேபாளம் மற்றும் பாகிஸ்தான் ஆகிய நாடுகளுக்கு நேரடியாகச் சென்று, அங்கு பதுங்கியிருந்த பிரதான கடத்தல்காரர்களைக் கண்டறிந்து விசேட சுற்றிவளைப்புகள் மூலம் கைது செய்துள்ளனர்.

இவ்வாறு கைது செய்யப்பட்டு நாட்டுக்கு அழைத்து வரப்பட்டவர்களில் குறிப்பாக இந்தோனேசியாவிலிருந்து கொண்டு வரப்பட்ட சந்தேகநபர்கள், தமது குற்றங்களை ஒப்புக்கொண்டு விரிவான வாக்குமூலங்களை வழங்கியுள்ளதாகவும் அமைச்சர் சுட்டிக்காட்டினார்.

மேலும், முன்னைய அரசாங்கங்கள் இவ்வாறான உயர்மட்ட போதைப்பொருள் விநியோகச் சங்கிலியை முறியடிக்கத் தவறியுள்ளதாக அவர் குற்றம் சாட்டினார்.

எனினும் தற்போதைய அரசாங்கம் கரையோரப் பகுதிகள், துறைமுகங்கள் மற்றும் விமான நிலையங்கள் வழியாக மேற்கொள்ளப்படும் கடத்தல்களைத் தடுக்கப் புதிய பாதுகாப்பு வியூகங்களை வகுத்துள்ளதாக பொது மக்கள் பாதுகாப்பு பிரதி அமைச்சர் சுனில் வட்டகல மேலும் குறிப்பிட்டார்.