இலங்கையின் 5.7 மில்லியன் மக்களிற்கு (26) மனிதாபிமான உதவி தேவைப்படுவதாக செஞ்சிலுவை மற்றும் செம்பிறை சமூகங்களின் சர்வதேச சம்மேளனம் தனது புதிய அறிக்கையில் தெரிவித்துள்ளது.
உடனடி மனிதாபிமான உதவிகள் ,அமைப்புகள் மற்றும் சேவைகளின் பலவீனத்தை நிவர்த்தி செய்வதற்கான தலையீடுகள் இல்லாத பட்சத்தில் மனிதாபிமான உதவிகள் தேவைப்படுபவர்களின் எண்ணிக்கை அதிகரிக்கும் விளைவுகள் தீவிரமடையும் என புதிய அறிக்கை தெரிவித்துள்ளது.
பொருளாதார நெருக்கடி காரணமாக உணவு பாதுகாப்பு மற்றும் வாழ்வாதாரம் பாதிக்கப்பட்டுள்ளது. அதேவேளை கல்வி மகப்பேறு மருத்துவமனை பராமரிப்பு பாலியல் இனப்பெருக்க சுகாதார சேவைகள் உட்பட சுகாதார சேவைகள் பாதிக்கப்பட்டுள்ளன என செஞ்சிலுவை மற்றும் செம்பிறை சமூகங்களின் சர்வதேச சம்மேளனம் தனது புதிய அறிக்கையில் தெரிவித்துள்ளது.
கல்வி மீதான தாக்கத்திற்கு அப்பால் சிறுவர் பாதுகாப்பு ஆபத்துக்கள் அதிகரித்துள்ளன,இயற்கை விவசாயத்திற்கு மாறுவதற்கான வெற்றியடையாத முயற்சி காரணமாக உருவாகியுள்ள உள்நாட்டு விவசாய உற்பத்தி வீழ்ச்சி நெருக்கடியை மேலும் தீவிரமானதாக மாற்றியுள்ளது.
மோசமாக பாதிக்கப்பட்டுள்ள அமைப்புமுறை சேவைகள் மற்றும் வசதிகள்(முக்கியமாக விவசாய துறை மீன்பிடித்துறை சுகாதார மற்றும் சமூக சேவை கல்விதுறைகள்)உடனடியாக மீள ஏற்படுத்தப்படாத பட்சத்தில் ஏற்கனவே நலிந்த நிலையில் உள்ள மக்கள் மேலும் மோசமான வறுமை நிலையை நோக்கி தள்ளப்படலாம் என அறிக்கை தெரிவித்துள்ளது.
குடும்பங்களும் குடும்பங்களில் உள்ளவர்களும் நெருக்கடிகளில் இருந்து தப்பிப்பதற்காக உணவை குறைத்தல் மருத்துவர்களை நாடுவதை தாமதித்தல் பாடசாலைகளில் இருந்து மாணவர்களை நிறுத்தி தொழிலிற்கு அனுப்புதல் தங்கள் சொத்துக்களை விற்றல் போன்ற நடவடிக்கைகளில் ஈடுபட்டுள்ளனர்.
மக்கள் திருட்டு குற்றச்செயல்கள் போன்றவற்றினால் பாதிக்கப்படுகின்றனர் எனவும் அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.