புகையிலை மற்றும் மதுபானம் தொடர்பான தேசிய அதிகாரசபை மற்றும் யாழ்ப்பாணம் போதனா வைத்தியசாலை தொடர்பான நிறுவன மதிப்பாய்வு போன்ற விடயங்கள் தொடர்பில் சுகாதாரம், வெகுசன ஊடகம் மற்றும் மகளிர் வலுவூட்டல் பற்றிய துறைசார் மேற்பார்வைக் குழுவில் கலந்துரையாடப்பட்டது.
சுகாதாரம், வெகுசன ஊடகம் மற்றும் மகளிர் வலுவூட்டல் பற்றிய துறைசார் மேற்பார்வைக் குழு அதன் தலைவர் பாராளுமன்ற உறுப்பினர் (வைத்தியர்) நிஹால் அபேசிங்க தலைமையில் கடந்த 21ஆம் திகதி கூடியபோதே இவ்விடயங்கள் குறித்த கலந்துரையாடல் இடம்பெற்றது.
இதற்கு அமைய புகையிலை மற்றும் மதுபானம் தொடர்பான தேசிய அதிகாரசபை தொடர்பில் இங்கு முதலில் கவனம் செலுத்தப்பட்டது.
இங்கு கருத்துத் தெரிவித்த குறித்த அதிகாரசபையின் அதிகாரிகள், புகையிலை மற்றும் மதுப்பாவனை காரணமாக வருடமொன்றுக்கு 22,000 பேர் உயிரிழப்பதாகவும், வருடமொன்றிற்கு ரூ.225 பில்லியன் முதல் ரூ.240 பில்லியன் வரையிலான தொகை இழக்கப்படுவதாகவும் சுட்டிக்காட்டினர்.
இந்த சூழ்நிலையை அடிப்படையாக சமாளிக்க தேவையான சட்ட விதிகள் உட்பட, புகையிலை மற்றும் மதுபானங்களுக்கான தேசிய அதிகாரசபைச் சட்டத்தில் திருத்தம் செய்யத் தேவையான நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வருவதாகவும் அவர்கள் தெரிவித்தனர்.
சிகரெட்டுக்கள் தனித்தனியாக விற்பனை செய்வதை உலகில் 104 நாடுகள் தடைசெய்துள்ளதாகவும், இந்த நாட்டிலும் அதே சட்டத்தை நடைமுறைப்படுத்த வேண்டியதன் முக்கியத்துவம் இருப்பதாகவும் அவர்கள் வலியுறுத்தினர்.
தனிப்பட்ட சிகரெட்டுகள் விற்கப்படும்போது, சிகரெட் பெட்டிகளில் உள்ள எச்சரிக்கைச் செய்திகள் நுகர்வோரைச் சென்றடைவதில்லையென்றும் அதிகாரிகள் குறிப்பிட்டனர்.
சிகரெட்டுகளின் விலைகளை நிர்ணயித்த பின்னர் அவற்றின் மீது வரி விதிப்பு மேற்கொள்ளப்பட வேண்டியதன் முக்கியத்துவத்தையும் புகையிலை மற்றும் மதுபானம் தொடர்பான தேசிய அதிகாரசபையின் அதிகாரிகள் வலியுறுத்தினர்.
இங்கு கருத்துத் தெரிவித்த குழுவின் தலைவர், புகையிலை மற்றும் மதுபானம் தொடர்பான தேசிய அதிகாரசபையினர் தமது சட்டத்தில் மேற்கொள்ள எதிர்பார்க்கும் திருத்தங்கள் மற்றும் குறித்த அதிகாரசபையினால் முன்னெடுக்கப்படும் ஏனைய வேலைத்திட்டங்களுக்குத் தேவையான ஆதரவைக் குழு வழங்கும் என்றார்.
இதனைத் தொடர்ந்து, யாழ்ப்பாணம் போதனா வைத்தியசாலையின் நிறுவன மதிப்பாய்வு குறித்து கலந்துரையாடப்பட்டதுடன், மருத்துவமனையின் அதிகாரிகள் அதன் தற்போதைய நிலை குறித்து குழுவுக்கு விளக்கமளித்தனர்.
மருத்துவமனையில் வழங்கப்படும் சிகிச்சை உட்பட, மருத்துவமனையில் வழங்கப்படும் அனைத்து சேவைகளினதும் வினைத்திறனை மேம்படுத்துவதற்கு ஊழியர்களுக்கான தேவை இருப்பதாக அதிகாரிகள் சுட்டிக்காட்டினர்.
யாழ்ப்பாணம் போதனா வைத்தியசாலையைத் தேசிய வைத்தியசாலையாக மாற்ற வேண்டியதன் அவசியத்தையும் அவர்கள் குழுவிடம் தெரிவித்தனர்.
இங்கு கருத்துத் தெரிவித்த சுகாதார மற்றும் வெகுசன ஊடகத்துறை அமைச்சின் செயலாளர், இலங்கையில் தற்போது 3 தேசிய வைத்தியசாலைகள் இருப்பதாகவும், தேவையான அளவுகோல்களை பூர்த்தி செய்தவுடன் விரைவில் யாழ்ப்பாணம் போதனா வைத்தியசாலையைத் தேசிய வைத்தியசாலையாக மாற்றமுடியும் என நம்புவதாகவும் கூறினார்.
ஊழியர்களை மீண்டும் மதிப்பாய்வு செய்ய வேண்டியதன் அவசியத்தையும் குழுவின் தலைவர் சுட்டிக்காட்டினார்.
அத்துடன், யாழ்ப்பாணம் போதனா வைத்தியசாலைக்கு உள்ளகக் கணக்காய்வாளரை நியமித்து வைத்தியசாலையின் நிர்வாகம் உள்ளிட்ட அதன் செயல்திறனை வெளிப்படைத் தன்மையுடன் முன்னெடுக்க வேண்டியதற்கான ஒத்துழைப்பை வழங்குமாறு வைத்தியசாலையின் அதிகாரிகள் குழுவிடம் கோரிக்கை விடுத்தனர்.



