2020 இல் ‘இலக்கு’ நோக்கி தனித்துவங்களுடன் இணைந்து பயணிப்போம்

234 Views

2020ம் ஆண்டுக்குள் உலகமக்கள் அடியெடுத்து வைக்கும் இனிமையான இந்த ஆண்டுத் தொடக்கத்தில் ஈழத்தமிழ் மக்களின் வரலாற்றுக்கு முற்பட்ட காலம் முதலான அவர்களின் தாயக-தேசிய-தன்னாட்சி உரிமைகளைப் பெறுவதற்கான ‘இலக்கு’ நோக்கிய சனநாயகப் பயணத்தில் உலகெங்கும் உள்ள தமிழர்களும் முழுஅளவில் இணைவோம் என உறுதிமொழி எடுப்போம்.

2000ம் ஆண்டு 2வது மில்லேனியம் பிறக்கின்ற நேரத்தில் ஈழத்தமிழ் மக்கள் தங்களுடைய சொந்த மண்ணில் தங்களுடைய தாயகத்தைத் தேசியத்தை தன்னாட்சியைப் பேணக் கூடிய முறையில் நடைமுறையில் உண்மையான அரசு (Defacto) ஒன்றைத் தாமே கொண்டிருந்தனர். உலகின் இராணுவத் தந்திரோபாய ஆய்வுகள் ஒரு தீவுக்குள் இரு அரசுக்கள் உள்ளன இவற்றை உலகு அங்கீகரிக்குமா என்ற கேள்வியை எழுப்பியிருந்தன.

2010ம் ஆண்டு பிறக்கின்ற நேரத்தில் சிறிலங்கா அரசின் தமிழின அழிப்பு யுத்தத்தால் ஈழத்தமிழர்கள் தங்களுக்கு இழைக்கப்பட்ட மனித உரிமை மீறல்களுக்கும் மனிதாயத்திற்கு எதிரான யுத்தக் குற்றச் செயல்களுக்கும் இனஅழிப்புகளுக்கும் நீதியையும் புனர்வாழ்வையும் தேடுகின்ற மக்களாகவும், சிறிலங்காப் படைகள் ஆக்கிரமித்த தங்களின் வாழ்விடங்களையும் தொழில்களையும் மீண்டும் பெற்றுக்கொள்ளும் போராட்டத்தில் தீவிரமாகச் செயற்பட்ட மக்களாகவும் ஈழத்தமிழ் மக்கள் விளங்கினர்.

2020ம் ஆண்டு பிறக்கின்ற நேரத்தில் சிங்களவர்கள் தமிழர்களுக்கு எந்த அரசியலதிகாரப் பரவலாக்கத்தையும் அனுமதிக்க மாட்டார்கள் ஆகவே அதிகாரப் பரவலாக்கல் என்ற பேச்சுக்குக் கூட இடமில்லை என்றும், சிறிலங்காப்படைகளிடம் சரணடைந்து காணாமல் ஆக்கப்பட்டவர்களின் கிட்டிய உறவினர்க்கு யுத்த விளைவுகளுக்குள்ளானவர்கள் என்ற மரணசான்றிதழையே பெறுவார்கள் என்றும் சிறிலங்காவின் அரசஅதிபரே அறிவித்த நிலையில், நாட்டின் தேசிய கீதம் கூட இனிச் சிங்களத்திலேயே பாடப்பட வேண்டும் என்பது போன்ற சிங்கள பௌத்த பேரினவாதத்தை அரசாங்கமே முன்னெடுக்கும் நடவடிக்கைகளுடனும், ஐக்கிய நாடுகள் சபையின் மனித உரிமை ஆணையகம் இலங்கையில் மனித உரிமை மற்றும் நல்லிணக்க மேம்பாடுகளுக்காக சிறிலங்கா அரசுடன் செய்த ஒப்பந்தங்களைக் கூடத் தாங்கள் நடைமுறைப்படுத்தப் போவதில்லை என்ற சிறிலங்கா அமைச்சரவையின் தீர்மானங்களுடனும் ஈழத்தமிழ் மக்கள் தங்கள் புதிய ஆண்டைத் தொடங்குகின்றனர்.

சுருக்கமாச் சொன்னால் 2009 முள்ளிவாய்க்கால் தமிழின அழிப்புக்குப் பொறுப்பான அண்ணன் – தம்பி இருவருமே பிரதமராகவும் அரசஅதிபராகவும் தொடங்கியுள்ள ஆட்சியின் போக்கு தமிழர்களுக்கு எப்படியிருக்கப் போகிறது என்பதற்கான அறிகுறிகள் தொடங்கி விட்டன.

இந்த ஏதோச்சதிகார ஆட்சி தொடங்கியுள்ள 2020இலாவது உலகெங்கும் புலம்பெயர்ந்து உலகின் பலநாடுகளின் குடிகளாகிவிட்ட ஈழத்தமிழர்களும், தமிழகத் தமிழர்களும், உலகத் தமிழர்களும் என்னும் இன்றைய உலகத் தமிழினம் ஈழத்தமிழர்களின் அனைத்து உரிமைகளையும் பாதுகாப்பதையும், அவர்களின் சமுக பொருளாதார அரசியல் ஆன்மிக உரிமைகளை அவர்கள் மேலும் இழக்காமல் காத்து, இழந்தவற்றை மீட்கும் அவர்களின் அனைத்து முயற்சிகளுக்கும் பக்கத்துணையாக நிற்க வேண்டிய இனத்துவப் பொறுப்பை உணர்ந்து செயற்பட வேண்டும்.

இன்று பல்வேறு தளங்களில், பல்வேறு வடிவங்களில், பல்வேறு அமைப்புக்களில், ஈழத்தமிழர்களின் உரிமைகளுக்காக சனநாயக வழிகளில் உழைக்கும் எல்லோரும், தங்கள் தங்கள் தனித்துவத்துடன், ஆனால் ஈழத்தமிழர்களின் தாயகம், தேசியம், தன்னாட்சி என்கிற ஒரே இலக்கை அவர்கள் அடைய வைக்கக் கூடிய முறையில் மாறுபாடுகளை மதித்து ஒற்றுமையுடன் பொதுவேலை திட்டத்தில் 2020இல் பயணித்தாலே தற்போது சனநாயகத்தின் மூலமே சர்வாதிகாரத்தை நிறுவும் இன்றைய சிறிலங்கா அரசின் புதிய இனஅழிப்பு இனத்துடைப்புத் தந்திரோபாயங்களை ஈழத்தமிழர்கள் எதிர்கொள்ள உதவ முடியும்.

Leave a Reply