யாழ். பல்கலைக்கழகத்தின் 19 மாணவர்கள் கைது

யாழ்ப்பாணப் பல்கலைக்கழக மாணவர்கள் 19 பேர் பகிடிவதை புரிந்த குற்றச்சாட்டில் கைது செய்யப்பட்டு விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளனர்.

குறித்த கைது நடவடிக்கை நேற்றையதினம் (29) முன்னெடுக்கப்பட்டுள்ளது. கடந்த 21ம் திகதி யாழ்ப்பாணப் பல்கலைக்கழக முகாமைத்துவ கற்கைகள் மற்றும் வணிக பீடத்தில் கல்வி பயிலும் சிரேஷ்ட மாணவர்கள், அதே பீடத்தில் கல்வி பயிலும் கனிஷ்ட மாணவர்கள் 15 பேரை பல்கலைக்கழகத்திற்குள் வெளியே உள்ள வீடொன்றுக்கு அழைத்துச் சென்று தாக்குதல் நடத்தி பகிடிவதையில் ஈடுபட்டுள்ளனர்.
குறித்த சம்பவம் தொடர்பாக பாதிக்கப்பட்ட தரப்பினரால் கோப்பாய் பொலிஸ் நிலையத்திற்கு முறைப்பாடு செய்யப்பட்டிருந்தது.

சம்பவம் தொடர்பாக விசாரணைகளை ஆரம்பித்த கோப்பாய் பொலிஸார் 19 மாணவர்களை அடையாளம் கண்டு கைது செய்தனர். கைதான 19 மாணவர்களும் யாழ்ப்பாணம் மேலதிக நீதிவான் நீதிமன்றத்தில் முற்படுத்தப்பட்ட நிலையில், அனைவரையும் எதிர்வரும் 3ம் திகதி வரை விளக்கமறியலில் வைக்குமாறு நீதிவான் உத்தரவிட்டார்.