வடக்கு மாகாண அனர்த்த நிவாரண நிதியாக 1872 மில்லியன் ரூபாய் ஒதுக்கீடு

அனர்த்தத்தால் பாதிக்கப்பட்ட வடக்கு மாகாணத்திற்காக முதற்கட்டமாக சுமார் 1,872 மில்லியன் ரூபாய் அனர்த்த நிவாரண நிதி ஒதுக்கப்பட்டுள்ளதாக யாழ், கிளிநொச்சி ஒருங்கிணைப்புக் குழுத் தலைவரும் கடற்றொழில் அமைச்சருமான இராமலிங்கம் சந்திரசேகர் தெரிவித்தார்.

நாட்டின் ஜனாதிபதி அநுரகுமார திசாநாயக்க முழு நாட்டுக்கும் சுமார் 10 ஆயிரத்து 290 மில்லியன் ரூபாவை முதற்கட்டமாக ஒதுக்கியுள்ள நிலையில், பாதிக்கப்பட்ட தரவுகளின் அடிப்படையில் மாவட்ட செயலாளர்களின் கண்காணிப்பில் பிரதேச செயலகங்கள் ரீதியாக இந்த நிதி பங்கீடு செய்யப்படவுள்ளது.

இதில் வடக்கு மாகாணத்தில் அதிக பாதிப்புக்கு உள்ளான மன்னார் மாவட்டத்திற்கு விசேடமாக 954 மில்லியன் ரூபாவும், யாழ்ப்பாணத்துக்கு 365 மில்லியன் ரூபாவும், கிளிநொச்சிக்கு 206 மில்லியன் ரூபாவும், முல்லைத்தீவுக்கு 189 மில்லியன் ரூபாவும், வவுனியா மாவட்டத்துக்கு 158 மில்லியன் ரூபாவும் ஒதுக்கப்பட்டுள்ளது.

மேலும், மாகாண சபைகளுக்கும் விசேட அனர்த்த நிவாரண நிதி கோரப்பட்டுள்ளது. வடக்கு மாகாணத்தில் உயிர் இழப்புகள் குறைவாக இருந்தாலும், விவசாயம் மற்றும் பண்ணை வளர்ப்பு அதிக பாதிப்பை எதிர்கொண்டுள்ளதாகவும், மன்னாரில் மட்டும் சுமார் 15 ஆயிரம் கால்நடைகள் உயிரிழந்திருக்கலாம் எனவும் அவர் குறிப்பிட்டார்.

இதனிடையே, நாடு பாரிய அனர்த்தத்தை சந்தித்துள்ள இந்த சமயத்தில் அரசியல் கட்சிகள் குறுகிய இலாபத்திற்காக அதிகார மோகத்தில் திரியாமல் மக்கள் நலனில் கவனம் செலுத்த வேண்டும் என்றும், அரசாங்கம் பாதிக்கப்பட்ட மக்களை மீட்டெடுக்க தயாராக இருப்பதாகவும் அமைச்சர் இராமலிங்கம் சந்திரசேகர் தெரிவித்தார்