இலங்கையின் மக்கள் தொகையில் 16.6% பேர் வறுமையில்!

இலங்கையில் மக்கள் தொகையில் 16.6 சதவீதமானவர்கள் வறுமையில் வாழ்கின்றனர். இது 2030ஆம் ஆண்டுக்குள் 5 சதவீதமாகக்  குறைக்க திட்டமிடப்பட்டுள்ளது என கண்டி மாவட்ட செயலாளர் இந்திக உடவத்த தெரவித்தார்.

கண்டி செயலகத்தில் நடைபெற்ற கூட்டம் ஒன்றிலே அவர் இதனைத் தெரிவித்தார்.

கிராமப்புற பொருளாதாரத்தை வலுப்படுத்த அரசு நடைமுறைப்படுத்தும் தேசிய திட்டம் தொடர்பாக விளக்கமளிக்கும் வகையில் இந்த கூட்டம் ஒழுங்கு செய்யப்பட்டிருந்தது.

இத்திட்டம் குறித்து அரச அதிகாரிகளுக்கு மாவட்ட ரீதியில் தெளிவுபடுத்தப்பட்டு வருகிறது. இது தொடர்பாகவே இந்த கூட்டம் கண்டி மாவட்ட செயலாளர் தலைமையில் கண்டியில் நடத்தப்பட்டது. அதன்போதே அவர் தனது தலைமையுரையில் இதனைத் தெரிவித்தார்.

அவர் மேலும் தெரிவித்ததாவது,

நாட்டின் மக்கள் தொகையில் 16.6% பேர் வறுமையில் வாழ்கின்றனர். மேலும் இந்த நிலைமையை 2030ஆம் ஆண்டுக்குள் 5% ஆகக் குறைக்க திட்டமிடப்பட்டுள்ளது. அதற்கான செயற்றிட்டங்கள் கட்டம் கட்டமாக நடைமுறைப்படுத்தப்பட்டு வருகிறது என்றார்.

கண்டி மாவட்ட மேலதிகச் செயலாளர் லலித் அட்டம்பாவல உட்பட மற்றும் பல அதிகாரிகள் இந்த நிகழ்வில் கலந்துகொண்டனர்.