“13-வது சட்டத் திருத்தம் அமல்படுத்தப்படும் என்ற நம்பிக்கை பாஜக-வுக்கு இருக்கிறது” – அண்ணாமலை

தமிழ்நாடு பா.ஜ.க மாநில தலைவர் அண்ணாமலை, இலங்கையில் 13-வது சட்டத் திருத்தம் முழுமையாக அமல்படுத்தப்பட்டு, இலங்கையில் வாழும் தமிழ் மக்களின் உரிமை நிலைநாட்டப்படும் என்ற நம்பிக்கை தமிழக பா.ஜ.க-வுக்கு இருப்பதாக  தெரிவித்திருக்கிறார்.

இதுகுறித்து அண்ணாமலை மேலும் தெரிவிககையில், “1987-ல் இந்திய – இலங்கை ஒப்பந்தத்தில் ஏற்பட்ட 13-வது சட்டத் திருத்தமானது, இலங்கையில் உள்ள மாகாணங்கள், சுயாட்சி மேற்கொள்ளும் வகையில், கல்வி, ஆரோக்கியம், விவசாயம், வீட்டுவசதி, நிலம், காவல்துறை போன்ற பிரிவுகளில் மாகாண நிர்வாகங்களுக்கு அதிகாரம் வழங்கியது. இலங்கைத் தமிழர்கள் உரிமை குறித்துப் பேசும் ஒரே அரசியலமைப்புச் சட்டப் பிரிவாக 13-வது சட்டத் திருத்தம் மட்டுமே இன்றுவரை இருந்துவருகிறது.

ஆனாலும், பல்வேறு கட்டுப்பாடுகளாலும் அரசியல் காரணங்களாலும், மாகாண நிர்வாகங்களால் பெரிதும் முன்னேற்றம் காண முடியவில்லை. அரசு நிலம், காவல் துறை ஆகிய அதிகாரங்களைப் பகிர்ந்துகொள்ள, இலங்கை அரசு இன்றளவும் தயங்கி வருகிறது. பிரதமர் நரேந்திர மோடி அவர்கள், இலங்கைத் தமிழ் மக்களின் சம உரிமை, நீதி, அமைதி மற்றும் மரியாதை காப்பாற்றப்பட, 13 ஆவது சட்டத் திருத்தம் அமல்படுத்தப்பட வேண்டும் என்று ஒவ்வொரு முறையும் இலங்கை அதிபர் மற்றும் பிரதமரைச் சந்திக்கும்போதும், இந்தச் சட்டத் திருத்தத்தைப் பற்றிக் குறிப்பிட்டிருக்கிறார்.

இலங்கைத் தமிழ் மக்களுக்காக 46,000 வீடுகளைக் கட்டிக் கொடுத்ததும், தமிழர்கள் அதிகம் வாழும் யாழ்ப்பாணத்தை, இலங்கைத் தலைநகர் கொழும்புடன் இணைக்கும் ரயில் திட்டத்திற்கான உதவியும், தமிழ் மக்கள் மேல், பாரதப் பிரதமர் மோடி அவர்களின் அதீத அன்பிற்கும் அக்கறைக்கும் எடுத்துக்காட்டாகும். மத்திய வெளியுறவுத் துறை அமைச்சர் ஜெய்சங்கர், தொடர்ச்சியாக இலங்கைத் தமிழர்கள் நலனுக்காகக் குரல் கொடுத்து வருகிறார். இந்த மாதம் 20-ம் தேதி அவர், இலங்கை பிரதமரைச் சந்தித்தபோது, மாகாணங்களுக்கு, அதிகாரப் பகிர்வை வழங்க வேண்டும் என்றும், பெயரளவில் மட்டுமே உள்ள 13-வது சட்டத் திருத்தத்தை, முழுவதுமாக அமல்படுத்த வேண்டும் என்றும் வலியுறுத்தியிருக்கிறார். கடந்த ஆண்டு மே மாதம், நான் இலங்கைக்குச் சென்றிருந்த போது நம் தமிழ் மக்களுக்கான கல்வி, பொருளாதாரம், வீட்டு வசதி உள்ளிட்ட மேம்பாட்டுத் திட்டங்களுக்கு, பிரதமர் நரேந்திர மோடியின் தலைமையிலான அரசு எப்போதும் துணை நிற்கும் என்று கூறினேன்.

இலங்கையில் வாழும் தமிழ் மக்களின் கோரிக்கையான 13-வது சட்டத் திருத்தம் முழுமையாக அமல்படுத்தப்பட்ட வேண்டும் என்ற கோரிக்கையை மத்திய வெளியுறவுத் துறை அமைச்சர் ஜெய்சங்கர் அவர்களிடம் தெரிவித்துள்ளேன். விரைவில், இலங்கையில், 13 ஆவது சட்டத் திருத்தம் முழுமையாக அமல்படுத்தப்பட்டு, மாகாணங்களுக்கான அதிகாரப் பகிர்வும், நம் தமிழ் மக்களுக்கான சம உரிமைகளும், அமைதியும், பொருளாதார முன்னேற்றமும் ஏற்படுத்த நமது மத்திய அரசு முயற்சிகள் மேற்கொண்டு வருவதாக நமது மத்திய வெளியுறவுத் துறை அமைச்சர் ஜெய்சங்கர் தெரிவித்தார். 13-வது சட்டத் திருத்தம் முழுமையாக அமல்படுத்தப்பட்டு இலங்கையில் வாழும் தமிழ் மக்களின் உரிமை நிலைநாட்டப்படும் என்ற நம்பிக்கை தமிழக பா.ஜ.க-வுக்கு இருக்கிறது” என்று தெரிவித்திருக்கிறார்.