13வது திருத்த சட்டத்தில் எமது நிலைப்பாட்டில் மாற்றம் இல்லை: இந்தியா

“தமிழருக்கான 13வது திருத்த சட்டத்தில் இந்தியாவின் நிலைப்பாட்டில் மாற்றம் இல்லை என இந்தியாவிற்கான ஐ.நா.பிரதிநிதி அரின்டம் பாக்ஜீ தெரிவித்துள்ளார்.

கடந்த வியாழக்கிமை ஐக்கிய நாடுகள் மனித உரிமைகள் சபையின் 58வது கூட்டத் தொடர் வேளையில், இந்திய தூதுவராலயத்தினால் ஏற்பாடு செய்யப்பட்டிருந்த ஓர் கூட்டத்தின் போதே இந்த தகவலை அவர் வெளியிட்டுள்ளார்.

ஐ.நா. மண்டபத்தில் நடத்தப்பட்ட இக் கூட்டத்தின் முக்கிய பேச்சாளராக, இந்தியாவின் தேசிய மனித உரிமை ஆணைக்குழுவின் தலைவர், நீதியரசர்(Justice) வி. இராம சுப்பிரமணியம், இந்தியாவின் மனித உரிமை நிலைமை பற்றி ஓர் நீண்ட உரையாற்றியிருந்தார். இவர் தமிழ் நாட்டு தமிழர் என்பது குறிப்பிடத்தக்கது. இவர் தனது உரையில், “படிப்பிக்கும் பொழுது யாரும் ஏதும் முக்கிய கேள்வி கேட்டால், இவ் விடயம் பாடத்திட்டத்தில் (syllabus) இல்லையென கூறுவது சுலபமென கூறியிருந்தார்”.

இராம சுப்பிரமணியத்தின் உரையை தொடர்ந்து சபையில் கேள்விகள், அபிப்பிராயங்கள், கருத்துக்கள் கூறுவது ஆரம்பமாகியது. அவ்வேளையில், அக் கூட்டத்தில் கலந்து கொண்ட பிரான்ஸ் தமிழர் மனித உரிமைகள் மையத்தின் – பொதுச்செயலாளர் ச.வி.கிருபாகரன் கேள்வி எழுப்பினார். அதாவது, சிறிலங்காவில் யுத்தம் முடிந்த காலம் தொட்டு, இந்தியாவினால், தமிழ் மக்களிற்கான அரசியல் தீர்வாக 13வது திருத்த சட்டத்தை முற்று முழுதாக நிறைவேற்ற வேண்டுமென இந்தியா கூறிவந்துள்ளது. ஆனால் சிறிலங்காவில் புதிய அரசாங்கம் ஆட்சிக்கு வந்ததை தொடர்ந்து, இந்தியா தமிழ் மக்களின் அரசியல் தீர்வு விடயத்தில் அமைதியாக உள்ளது? இவ் அமைதி, 13ம் திருத்த சட்ட விடயத்தில் இந்தியாவின் கொள்கையில் மாற்றம் ஏற்பட்டுள்ளதா? என கிருபாகரன் கேள்வி எழுப்பினார்.

இவ்வினா வெளிநாட்டு விடயமாகையால் இராம சுப்பிரமணியம் இவ் வினாவிற்கு பதில் கூறுவதை தவிர்த்திருந்த பொழுதிலும், இந்தியாவிற்கான ஐ.நா. பிரதிநிதி அரின்டம் பாக்ஜீ (Mr. Arindam BAGCHI) அவர்கள், சபையில் உடனே பதில் கூறியிருந்தார். அவர் கூறியதாவது, “சிறிலங்கா விடயத்தில், தமிழ் மக்களுக்கான அரசியல் தீர்வான 13வது திருத்த சட்டம் என்பதில் இந்தியாவின் நிலைப்பாட்டில் எந்த மாற்றமும் கிடையாது. நீங்கள் விரும்பினால், இவ்விடயமாக டெல்கியில் கதைத்து உறுதிப்படுத்தலாமெனவும் கூறியிருந்தார்.

அரின்டம் பாக்ஜீ , சிறிலங்காவில் 2014ம் முதல் 2018 ஆண்டுவரை இந்தியாவின் துணை தூதுவராக கடமையாற்றியதுடன், இந்தியாவின் வெளிநாட்டு அமைச்சின் பேச்சாளராக மூன்று வருடங்கள் கடமையாற்றினார் என்பது இங்கு குறிப்பிடத்தக்கது.

இக் கூட்டத்தில் சிறிலங்காவின் தூதுவர் திருமதி கிமாலி அருணதிலாக உட்பட, மண்டபம் நிறைந்த ராஜதந்திரிகள், தமிழ் செயற்பாட்டாளர்கள் கலந்து கொண்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.