அமரகீர்த்தி அத்துகோரலவின் கொலை வழக்கில் 12 பேருக்கு மரண தண்டனை!

பொலன்னறுவை மாவட்ட முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர் அமரகீர்த்தி அத்துகோரல தாக்கி கொலை செய்யப்பட்ட சம்பவம் தொடர்பான வழக்கில் குற்றவாளிகளாக இனங்காணப்பட்ட 12 பேருக்கு மரண தண்டனை விதித்து தீர்ப்பளிக்கப்பட்டுள்ளது.

கம்பஹா மேல் நீதிமன்றத்தின் மூவரடங்கிய நீதிபதிகள் ஆயம் இந்த தீர்ப்பை அறிவித்தது.
அத்துடன், 4 பேருக்கு 5 வருடம் ஒத்திவைக்கப்பட்ட ஆறு மாத கால சிறைதண்டனை விதிக்கப்பட்டுள்ளது.
இதேவேளை, இந்த சம்பவம் தொடர்பில் குற்றஞ்சாட்டப்பட்டிருந்த 23 பேர் இந்த வழக்கிலிருந்து நிரபராதிகளாக கருதி விடுதலை செய்யப்பட்டுள்ளனர்.

இந்த வழக்கில் 41 பேருக்கு எதிராக சட்டமா அதிபரால் குற்ற பத்திரம் தாக்கல் செய்யப்பட்டிருந்தது.
கடந்த 2022 ஆம் ஆண்டு மே மாதம் 9 ஆம் திகதி நாட்டில் ஏற்பட்ட அரசாங்கத்துக்கு எதிரான “அரகலய” போராட்டத்தின் போது, நிட்டம்புவ நகரில் வைத்து பொலன்னறுவை மாவட்ட பாராளுமன்ற உறுப்பினராக இருந்த அமரகீர்த்தி அத்துகோரல மற்றும் அவரது பாதுகாப்பு உத்தியோகத்தர் ஆகியோர் ஆவேசமடைந்த கும்பலால் தாக்குதலுக்கு இலக்காகி உயிரிழந்தமை குறிப்பிடத்தக்கது.