11 இளைஞர்கள் கடத்தல்; கடற்படையினர் மீதான வழக்கை இடைநிறுத்த உத்தரவு

11 இளைஞர்கள் கடத்தப்பட்டு காணாமல் ஆக்கப்பட்ட சம்பவத்துடன் தொடர்புடைய
வழக்கில் முன்னாள் கடற்படைத் தளபதி அட்மிரல் வசந்த கரன்னகொட மற்றும் கொமடோர் டி.கே.பி.தசநாயக்க ஆகியோருக்கு எதிரான விசாரணையை இடைநிறுத்துமாறு சட்ட மா அதிபருக்கு ஜனாதிபதி ஆணைக்குழு பரிந்துரை வழங்கியுள்ளது.

கடந்த ஆட்சிக் காலத்தில் இடம்பெற்ற அரசியல் பழிவாங்கல்கள் காரணமாகப் பதவி துறந்த அல்லது நடவடிக்கைகளுக்கு உள்பட்ட அரச ஊழியர்கள், அரச கூட்டுத் தாபனங்கள் மற்றும் துணை அரச நிறுவனங்களின் பணியாளர்கள் பற்றிய முறைப்
பாடுகளை விசாரிப்பதற்கான ஜனாதிபதி விசாரணை ஆணைக் குழுவே இந்தப் பரிந்துரையை சட்டமா அதிபருக்கு வழங்கியுள்ளது.

ஓய்வு பெற்ற உயர் நீதிமன்ற நீதியரசர் ஜகத் பாலபெட்டபந்தி தலைமையில் இந்த ஜனாதிபதி ஆணைக்குழு அமைக்கப்பட்டது. இதன் செயலாளராக சட்டத்தரணி
சுமுது கே.விக்கிரமராச்சியை உள்ளார்.

2008 – 2009 காலப்பகுதியில் 11 தமிழ் இளைஞர்கள் கொழும்பு மற்றும் அதனை
அண்டிய பகுதிகளில் கடத்தப்பட்டு காணாமல் போகச் செய்யப்பட்ட சம்பவத்துக்கு உதவியாகவும் உடந்தையாகவும் இருந்தனர் என்ற குற்றச்சாட்டின் பேரில் முன்னாள் கடற்படைத் தளபதி அட்மிரல் வசந்த கரன்னகொட மற்றும் கொமடோர் டி.கே.பி.தசநாயக்க ஆகியோருக்கு எதிராகக் கொழும்பு சிறப்பு மேல் நீதிமன்
றில் குற்றப்பத்திரிகை தாக்கல் செய்யப்பட்டுள்ளது.

இந்த வழக்கில் கடற்படை அதிகாரிகள், சிப்பாய்கள் உள்பட 14 பேர் எதிரிகளாக உள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.