8ஆம் திகதி வரையில் இந்திய – இலங்கை கடற்படையினருக்கிடையிலான பயிற்சிகள் தொடரும்

இலங்கை இந்திய கடற்படையினருக்கிடையிலான பத்தாவது வருடாந்த கடல்சார் இருதரப்பு பயிற்சிகள் கடந்த 3ஆம் திகதி ஆரம்பமாகி 8ஆம் திகதி வரை கொழும்பில் இரு கட்டங்களாக நடைபெறுகின்றது.

இதில் முதற்கட்டமாக 3ஆம் திகதி முதல் நேற்று வரையில் துறைமுக மட்டத்திலான பயிற்சிகள் கொழும்பிலும் இன்று முதல் 8ஆம் திகதி வரையில் கொழும்புக்கு அப்பாலுள்ள கடற்பரப்பில் கடல்சார் பயிற்சிகளும் நடைபெறுகின்றன.

இந்தியக் கடற்படையானது ஐ.என்.எஸ். கில்தான் ( அதிநவீன நீர்மூழ்கி எதிர்ப்பு கடற்படைக் கப்பல்) மற்றும் ஐ.என்.எஸ். சாவித்ரி (ரோந்துக் கப்பல்) ஆகிய கடற்படை கப்பல்களால் பிரதிநிதித்துவப்படுத்தப்படும் அதேநேரம் இலங்கை கடற்படையானது எஸ்.எல்.என்.எஸ். கஜபாகு ( அதிநவீன ரோந்துக் கப்பல்) மற்றும் எஸ்.எல்.என்.எஸ். சாகரா ஆகியவற்றால் பிரதிநிதித்துவப் படுத்தப்படுகின்றது.

இதற்கு மேலதிகமாக இந்திய கடற்படையின் செத்தக் உலங்குவானுார்தி மற்றும் கடல் ரோந்து பணிகளுக்கான டோனியர் விமானமும் இலங்கை கடற்படையின் டோனியர் விமானம் மற்றும் பெல் 412 ரக உலங்குவானுார்தி ஆகியவையும் இப்ப பயிற்சியில் கலந்துகொள்கின்றன. இரு கடற்படையினரதும் விசேட படைகளும் இப்பயிற்சியில் பங்கேற்கின்றன. இதற்கு முன்னதான இப்பயிற்சி கடந்த ஆண்டு மார்ச் 7ஆம் திகதி முதல் 12ஆம் திகதி வரை விசாகபட்டினத்தில் இடம்பெற்றிருந்தமை குறிப்பிடத்தக்கது.

இருநாடுகளினதும் கடற்படையினரின் இயங்குதிறன் மேம்பாடு, பரஸ்பர புரிந்துணர்வினை மேம்படுத்துதல், கடல் மார்க்கமான பன்முக செயற்பாடுகள் மற்றும் ஏனைய நடவடிக்கைகளின் சிறந்த செயல்முறைகளை பரிமாறுதல் ஆகியவற்றினை இலக்காகக் கொண்டு இவ்வாண்டுக்கான பயிற்சிகள் இடம்பெறுகின்றன.