இலக்கியத் துறைக்கான இலக்கிய வித்தகர் விருது பெறும் க. யோகானந்தன்

கிழக்கு மாகாண பண்பாட்டு அலுவல்கள் திணைக்களத்தின் ஏற்பாட்டில் வருடாவருடம் நடத்தப்பட்டுவரும் இலக்கிய விழாவில் கலைஞர்களை ஊக்குவிப்பு செய்து வருவது அறிந்ததே
அந்தவகையில் 2023ஆம் ஆண்டிற்கான இலக்கிய வித்தகர் விருதுகளுக்காக தேர்வு
செய்யப்பட்டவர்களில் சம்பூர் -திருகோணமலையைச் சேர்ந்த கவிஞர் கனகசூரியம்
யோகானந்தன் தெரிவு செய்யப்பட்டுள்ளார்.
ஓய்வுபெற்ற அதிபரான கனகசூரியம் யோகானந்தன் அவர்கள் கடந்த 30 வருடங்களுக்கு மேலாக இலக்கியப் பணிபுரிந்து வருகிறார்.இதுவரை ஐந்து கவிதை நூல்களை எழுதியுள்ளார்.
2006 கவிதை நூலுக்கான சாஹித்ய மண்டலப் பரிசினைப் பெற்றுள்ளார். 2019 இல் கவிதை நூலுக்கு “பிரமிள்”விருதினையும் நகரமுதல்வர் விருதும் பெற்றுள்ளார்.
அத்தோடு இலக்கியச் செயற்பாடுகளில் ஈடுபாடு கொண்ட இவர் கவியரங்கம், பட்டிமன்றம் போன்ற வற்றில் தலைமை ஏற்று பல மாணவர்களை ஊக்குவித்து வருகிறார். நிகழ்ச்சித் தொகுப்பாளராகவும், பட்டிமன்ற பேச்சாளராகவும், இலக்கிய விமர்சகராகவும் , பேச்சாளராகவும் விளங்கி வருகிறார்.
உலகத்தமிழர் கலை மற்றும் பண்பாட்டுப் பேரவையின் உபதலைவர்களில் ஒருவராகவும் இருந்து பல நிகழ்வுகளில் பங்கேற்று வருகிறார்.
உலகத்தமிழர் பண்பாட்டுப் பேரவையின் சர்வதேச தலைவர் மற்றும் உறுப்பினர்களால் “இணையுரைத் திலகம்” எனும் பட்டம் வழங்கிக் கெளரவிக்கப்பட்டமை  குறிப்பிடத்தக்கது. கலைகள் மீதும், இலக்கியங்கள் மீதும் தீராத காதல் கொண்டவர். ஒருசில பாடல்கள், மற்றும் வலய, பாடசாலைக் கீதங்கள் இயற்றியுள்ளார்.
வளர்ந்து வரும் கலைஞர்களை ஊக்குவிப்பதோடு உலக கவியரங்கங்களிலும் பங்கு கொண்டு வருகிறார்
2023ஆம் ஆண்டுக்கான இலக்கிய விழாவில் கலைஞர்கள் கெளரவிக்கப்படவுள்ள
நிலையில் இம்முறை அம்பாறை காரைதீவு கலாசார மண்டபத்தில் விழாவினை நடத்துவதற்கான பூர்வாங்க ஏற்பாடுகளை பண்பாட்டு அலுவல்கள் திணைக்களம் மேற்கொண்டு வருகிறது.