எத்தனை வாக்குறுதி மலைநாடும், மயிலத்தமடுவும் பட்டியலில் கடைசியா? மனோ

இந்நாட்டில் சுதந்திரம் பெற்றோம் என நாம் கொண்டாடும் பெப்ரவரி 4ம் திகதி இவ்வருட தினத்துக்கு முன், தேசிய இனப்பிரச்சினைக்கு தீர்வு, என நாட்டின் ஜனாதிபதி விக்கிரமசிங்க  வாக்குறுதி அளித்தார். 13A அமுல் என வாக்குறுதி அளித்தார். அப்புறம் 13Aல் பொலிஸ், காணி மைனஸ் என வாக்குறுதி அளித்தார். அப்புறம் எம்பி விக்கினேஸ்வரனை துணைக்கு அழைத்துக்கொண்டு வடக்கில் மாகாண நிர்வாக குழு அமைப்போம் என வாக்குறுதி அளித்தார். தொல்பொருள் திணைக்களத்தை அழைத்து காணிகளை விடுவியுங்கள் என கட்டளை இட்டார். திணைக்களத்தின் பணிப்பாளர் பதவி விலகினாரே தவிர ஜனாதிபதியின் கட்டளை நிறைவேறவில்லை.
பிறகு அவரது அரசு தேர்தல்களை பின்போட சர்வஜன வாக்கெடுப்பு என்று பேசுகிறது. அவர் நேரடியாக சொன்னாலும், அவருக்கு நேரடி நெருக்கமாக அவரது அரசில் இருப்போர் சொன்னாலும் எமக்கு ஒன்றுத்தான். இப்போது  ஜனாதிபதி முறைமையை அகற்ற போகிறேன் என்கிறார். முன்னாள் சபாநாயகர் கரு ஜயசூரியவை துணைக்கு அழைத்துக்கொண்டு பாராளுமன்ற தேர்தல் முறையை மாற்றி தமிழ் பேசும் பிரதிநிதித்துவங்களுக்கு ஆப்பு வைப்பேன் என சொல்லாமல் சொல்கிறார்.
பிரிட்டீஷ் ஸ்கொட்லன்ட் யார்ட் பொலிசை அழைத்து, உயிர்த்த ஞாயிறு குண்டு வெடிப்பு விசாரணையை கையளிப்போம் என பாராளுமன்றம் வந்து வாக்குறுதி அளித்தார். இப்போது ஜெர்மனிக்கு போய் சர்வதேச விசாரணை கிடையவே கிடையாது என்கிறார். உள்ளூரில் மீண்டும் பாராளுமன்ற குழு அமைப்பதாக சொல்கிறார்.
பெருந்தோட்ட துறையில் காணி பிரச்சினைக்கு இதோ தீர்வு, அதோ தீர்வு என்று இவரது அரசாங்க அமைச்சர்கள் இரண்டு பேர், ஒருவர்  பெருந்தோட்டம், அடுத்தவர் தோட்ட உட்கட்டமைப்பு, சொன்னார்கள். ஆனால் ஒன்றையும் காணோம். இந்த அமைச்சர்கள் இந்த பதவிகளுக்கு வர முன்னமேயே ஒரு சம்பவம் இலங்கை பாராளுமன்றத்தில் நடந்தது. இதை இவர்கள் படித்து அறிய வேண்டும்.
இன்றைய ஜனாதிபதி விக்கிரமசிங்க இதே பாராளுமன்றத்தில், பிரதமராக சில காலம் இருந்த போது, பாராளுமன்றத்தில் நான் எழுப்பிய கோரிக்கையை ஏற்று, உடனடியாக பெருந்தோட்டங்களில் உள்ள பயிரிடப்படாத தரிசு நிலங்களை பிரித்து  பெருந்தோட்ட குடும்பங்களுக்கு வழங்குகிறேன் என வாக்குறுதி அளித்தார். அதற்கு “மனோ கணேசன் திட்டம்” என பெயரும் வைக்கிறேன் எனவும் பகிரங்கமாக பாராளுமன்றத்தில் வாக்குறுதி வழங்கினார்.  “ஐயா சாமி, எனது பெயர் வேண்டாம், எனது மக்களுக்கு காணி கொடுங்கள். அது போதும்” என்று அப்போதே நான்  திருப்பி அவருக்கு சொன்னேன்.  இன்று எங்கே அந்த பெருந்தோட்டங்களில் உள்ள பயிரிடப்படாத தரிசு நில காணிகள், மிஸ்டர் பிரசிடென்ட்?
கடைசியாக இப்போது மயிலத்தமடு கால்நடை மேய்ச்சல் தரை விவகாரம் தொடர்பில், அதிகாரிகளை அழைத்து பணிப்புரை விடுத்தார். இன்று, அங்கே புத்தர் சிலையை கொண்டு வந்து  நிறுத்தி உள்ளார்கள். அங்குள்ள அந்த அம்பிட்டிய பிக்கு வாயை திறந்தால் தெருச்சண்டியன் மாதிரி தூஷணம் பேசுகிறார். மேய்ச்சல் தரையில் பாரம்பரியமாக கால்நடை வளர்ப்பில் ஈடுபட்டு வந்த மக்களுக்கு நிலம் கையளிக்கப்படுவது ஒருபுறம் இருக்க, இப்போது கெளதமரையும் அங்கே இவர்கள் கொண்டு வந்து நிறுத்தி இருப்பது, மயிலத்தமடு, “மாடு” களுக்கே அடுக்காது என ஜனநாயக மக்கள் முன்னணி, தமிழ் முற்போக்கு கூட்டணி தலைவரும், கொழும்பு மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினருமான மனோ கணேசன் தெரிவித்துள்ளார்.
கொழும்பில், நடைபெற்ற, தமிழ் முற்போக்கு கூட்டணி அரசியல் குழு கூட்டத்தின் பிறகு ஊடகவியலாளர்களை சந்தித்த மனோ கணேசன் எம்பி மேலும் கூறியதாவது,
ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க சீனத்தில் இருந்து நாடு திரும்பிய உடன் அவரை நான் சந்திக்க விரும்புகின்றேன். சந்தித்து இந்த கேள்விகளை எல்லாம் அவரிடம் தனிப்பட்ட முறையில் நேரடியாக நானே எழுப்ப உள்ளேன். எடுத்த எடுப்பிலேயே பாராளுமன்றத்தில் அனைவர் முன்னிலையிலும் இவற்றை எழுப்பி, தனிப்பட்ட முறையில் அவரை நன்கு அறிந்த நான் நாட்டின் ஜனாதிபதியை தர்ம சங்கடத்துக்கு உள்ளாக்க விரும்பவில்லை.  வாக்குறுதிகளை நிறைவேற்ற முடியாமை தொடர்பில், வெளியே சொல்ல முடியாத காரணங்கள் இருந்தாலும் அவர் என்னிடம் சொல்வார் என நம்புகிறேன். அவற்றை அப்படியே வெளியே வந்து சொல்ல  அவர் விரும்பாவிட்டால் நான் வெளியிடவும் மாட்டேன்.

ஆனால், இவை பற்றிய தெளிவை நான் தேடுகிறேன். கொழும்பாக இருந்தாலும், மலைநாடாக இருந்தாலும், வடக்காக இருந்தாலும், கிழக்காக இருந்தாலும், எங்களுக்கு இனியும் இருட்டரையில் நின்று வழி தேடி தடுமாற முடியாது.   ஆகவே, எத்தனை பிரதமர் ரணில்? எத்தனை ஜனாதிபதி ரணில்? எத்தனை வாக்குறுதி? மலைநாடும், மயிலத்தமடுவும் பட்டியலில் கடைசியா?