தியாக தீபம் திலீபனின் 36 வது நினைவு நாளையொட்டி ஞாயிற்றுக்கிழமை செப்டம்பர் 24.2023 மாலை 6 மணியளவில் மொன்றியல் கணேஷா மண்டபத்தில் கியூபெக் தமிழர் கலை பண்பாட்டுக் கழகத்தால் முன்னெடுக்கப்பட்டு உணவெழுச்சியுடன் நினைவேந்தல் நிகழ்வு நடைபெற்றது.
கனடா மற்றும் தமிழீழ தேசிய கீதத்துடன் ஈகைச்சுடரேற்றி ஆரம்பமானது நிகழ்வு. அகவணக்கத்தை தொடந்து தமிழ் உறவுகள் அனைவரும் தியாக தீபம் திலீபனின் உருவப்படத்திற்கு மலர் தூவி அஞ்சலி செலுத்தினர்.
மொன்றியல் வாழ்சிறார்களிடமிருந்து”தியாக தீபம் தீலீபனின் உருவப்பட ஓவியக் கீறல்கள்” பெறப்பட்டிருந்தன. திருமதி சாந்தி இலங்கா அவர்களின் திலீபனின் 12 நாள் உண்ணாவிரத நாட்களை நினைவு படுத்தும் முகமாக 12 குறுங்கவிதைகளோடு திரு.ஜேம்சன் அவர்களின் கவிதையும் சேர்ந்து சிறார்கள் தாம் வரைந்த ஓவியங்களை ஓவியக்கவிதாஞ்சலியாக சமர்ப்பிக்கப்பட்டதை தொடர்ந்து ஓவியங்கள் காட்சிப்படுத்தப்பட்டன. ஓவியம் வரைந்த அனைத்து குழந்தைகளிற்கும் தாயக சின்னம் பதித்த சால்வை வழங்கி கௌரவிக்கப்பட்டார்கள்.
செல்வன் பாரித் ஜெகன் கணீரென்ற குரலில் தேன் தமிழில் எழுச்சியுரை வழங்க கூட்டம் உணர்வெழுச்சி கொண்டது.
தொடர்ந்து அழகிய வண்ணத்தில் அழியா சுடரான தியாக தீபம் திலீபனை பக்தியோடு ஓவியமாக தீட்டிய திருமதி. தேவகி கந்தசாமி தனது அனுபவத்தை பகிர்ந்துகொண்டார். மொன்றியல் புகழ் தாயக பாடகர் திரு திருமால் அவர்கள் ஈழத்தின் பிரபல இசைக்கலைஞரான ரமணன் இசையமைத்த “ஓ.. மரணித்த வீரனே” மற்றும் “பச்சை வயலே” பாடல்களை உணர்வுடன் பாடினார்.
அதனை தொடர்ந்து திரு புவனா அவர்கள், திருமதி.நிலா செல்வராஜா அவர்கள் திருமதி.இளவரசி இளங்கோவன் அவர்கள் , திரு திருலோகநாதன் அவர்கள் திலீபனை பற்றிய நினைவு உரைகளை ஆற்ற , சுபிதா தர்மகுலசேகரம் மற்றும் அம்சயா தவபாலன் ஆகியோர் கவி கொண்டு நினைவஞ்சலி செலுத்தினர்.
திருமதி.குமாரி “திலீபன் அழைப்பது சாவையா” மற்றும் “கடலே பொங்காதே ” தாயக பாடல்களை உருக்கத்துடன் பாடினார்.
இறுதியில் திரு. தவபாலன் எழுச்சி கவிதையோடு அசைக்க முடியாத இரும்பின் உறுதியோடு அணுஅணுவாக மரணத்தை அணைத்துக் கொண்ட தமிழினத்தின் இரும்பு மனிதன் தியாக தீபம் திலீபனின் நிகழ்வு நம்புங்கள் தமிழீழம் என்ற பாடலுடன் 9 மணியளவில் இனிதே நிறைவுபெற்றது.