அரசாங்கத்துடன் எதிர்காலத்தில் பேசுகின்ற போது ஒரே குரலில் பேச வேண்டும் என ஜனநாயக தமிழ் தேசிய கூட்டனியின் இணைத் தலைவரும், ஊடகப்பேச்சாளருமான சுரேஷ் பிரேமச்சந்திரன் தெரிவித்துள்ளார்.
வவுனியாவில் நேற்று (18.06.2023) இடம்பெற்ற கட்சியின் நிறைவேற்றுக் குழுக் கூட்டத்தின் பின் ஊடகங்களுக்கு கருத்து தெரிவித்தபோதே இவ்வாறு தெரிவித்துள்ளார்.
மேலும் அவர் தெரிவிக்கையில், ஜனநாயக தமிழ் தேசியக் கூட்டனியின் உயர்மட்டக் குழுவான நிறைவேற்றுக் குழு கூடி பல முக்கிய தீர்மானங்களை எடுத்துள்ளது.
இந்தக் கட்சிக்கான யாப்பு தயாரிக்கப்பட்டு இன்று இறுதி வடிவம் பெற்றுள்ளது. ஜனநாயக தமிழ் தேசியக் கூட்டனியில் உள்ள 5 கட்சிகளும் யாப்பை ஏற்றுக் கொண்டுள்ளார்கள்.
இந்த யாப்பு அடுத்து சில தினங்களில் தேர்தல் ஆணையாளருக்கு அனுப்பி வைக்கப்படும். அதேபோல் ஜனநாயக தமிழ் தேசியக் கூட்டணியின் பதவி நிலைகளுக்கும் நபர்கள் தெரிவு செய்யப்பட்டுள்ளனர். இணைத் தலைவர்களை கொண்ட கட்சியாக இது தொடர்ந்து செயற்படும். தற்போது 5 கட்சிகள் இதில் உள்ளன. அவர்கள் 5 பேரும் இணைத் தலைவர்களாக செயற்படுவர்.
ஜனநாயக தமிழ் தேசியக் கூட்டனியை வடக்கு – கிழக்கு பகுதி எங்கும் விஸ்தரிப்பது என தீர்மானித்துள்ளோம். அதனுடைய தேசிய அமைப்பாளராக கிழக்கு மாகாணத்தின் நாடாளுமன்ற உறுப்பினராக இருக்கின்ற ஜனா அவர்களை தெரிவு செய்துள்ளோம்.
வடக்கு – கிழக்கு மாகாணங்களில் கட்சியை பலப்படுத்த சகல நடவடிக்கைகளையும் அவர் எடுப்பார் என்பதுடன், மாவட்டங்கள், தொகுதிகளுக்கான அமைப்பாளர்களை தெரிவு செய்து உயர்மட்ட குழுவுடன் பேசி இறுதி செய்வார் என நம்புகின்றோம். கட்சியின் பொருளாளராக ஜனநாயக போராளிகள் கட்சியைச சேர்ந்த துளசி தெரிவு செய்யப்பட்டுள்ளார். அவருடன் இணைந்து நிதிக் குழு ஒன்றையும் நிறுவ என முடிவு எடுக்கப்பட்டுள்ளது.
என்னை மாற்றும் வரை நான் இந்தக் கட்சியின் உடைய பேச்சாளராககவும் தெரிவு செயற்படுவேன். தமிழ் மக்களுடைய உரிமைகளைப் பெற்றுக் கொள்ளும் செயற்பாட்டை மிக இறுக்கமாக எதிர்காலத்தில் முன்னெடுப்பதற்கு இவர்கள் இணைந்து செயற்படுவார்கள் என எதிர்பார்க்கின்றோம்.
மேலும் தற்போதைய அரசியல் நிலமை தொடர்பிலும் கலந்துரையாடியுள்ளோம் என தெரிவித்துள்ளார்.