கடந்த மே மாதம் நாடளாவிய ரீதியில் 3.9 மில்லியன் மக்கள் பகுதியளவிலான உணவுப் பாதுகாப்பின்மைக்கும், 10,000 பேர் தீவிர உணவுப் பாதுகாப்பின்மைக்கும் முகங்கொடுத்துள்ளனர்.
உலக உணவுத்திட்டத்தினால் கடந்த மேமாதம் மேற்கொள்ளப்பட்ட உணவுப்பாதுகாப்பு தொடர்பான மதிப்பீட்டிலேயே மேற்குறிப்பிட்ட தகவல்கள் வெளியாகியுள்ளன. அம்மதிப்பீட்டின் பிரகாரம் கடந்த மேமாதம் 3.9 மில்லியன் மக்கள், அதாவது நாட்டின் மொத்த சனத்தொகையில் 17 சதவீதமானோர் பகுதியளவிலான உணவுப்பாதுகாப்பின்மைக்கும், 10,000 பேர் தீவிர உணவுப்பாதுகாப்பின்மைக்கும் முகங்கொடுத்துள்ளனர்.
கடந்த ஆண்டு மேமாதம் 6.2 மில்லியன் மக்கள் பகுதியளவிலான உணவுப்பாதுகாப்பின்மைக்கும், 66000 பேர் தீவிர உணவுப்பாதுகாப்பின்மைக்கும் முகங்கொடுத்திருந்த நிலையில், அதனுடன் ஒப்பிடுகையில் தற்போது நிலைவரம் முன்னேற்றமடைந்துள்ளது.
பெருந்தோட்டப்பகுதிகளிலேயே உணவுப்பாதுகாப்பின்மை வீதம் உயர்வாகப் பதிவாகியிருப்பதுடன், அங்கு பெரும்பாலான குடும்பங்கள் தமது பிரதான வருமானத்துக்கு சமுர்த்தி, விசேட தேவையுடையோருக்கான உதவிக்கொடுப்பனவு போன்ற சமூகப்பாதுகாப்பு உதவித்திட்டங்களிலேயே தங்கியுள்ளன.
அதேபோன்று, தமது உணவுத்தேவையைப் பூர்த்திசெய்துகொள்வதற்காக வாழ்வாதார அடிப்படையில் பல்வேறு மாற்றுவழிகளைக் கையாளும் குடும்பங்களின் எண்ணிக்கை கடந்த ஆண்டு மேமாதம் 48 சதவீதமாகப் பதிவாகியிருந்த நிலையில், அது இவ்வருடம் மார்ச் மாதத்தில் 62 சதவீதமாக உயர்வடைந்துள்ளது. குறிப்பாகக் கடந்த மேமாதத்தில் 36 சதவீதமான குடும்பங்கள் தமது உணவின் அளவை சுருக்கியிருப்பதுடன், 19 சதவீதமான குடும்பங்கள் உணவு வேளையைத் தவிர்த்துள்ளன.
இவ்வாறு பொருளாதார நெருக்கடியின் விளைவாகப் பாதிக்கப்பட்டுள்ள மக்களுக்கு உதவும் நோக்கில் 2022 ஆம் ஆண்டு ஜுன் மாதம் உலக உணவுத்திட்டத்தினால் ஆரம்பிக்கப்பட்ட உணவு விநியோக மற்றும் பாடசாலை உணவு, போசணை உதவி வழங்கல் செயற்திட்டத்தின் ஊடாக இதுவரையில் 763,808 பேருக்கு உணவுப்பொருள் உதவிகளும், 610,172 பேருக்கு காசோலை உதவியும் வழங்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.