வொல்கர் ரெக், வெளிவிவகார அமைச்சர் உள்ளிட்ட பல தரப்பினரை சந்தித்து கலந்துரையாடல்!

இலங்கைக்கு விஜயம் மேற்கொண்டுள்ள ஐக்கிய நாடுகள் மனித உரிமைகள் பேரவையின் உயர்ஸ்தானிகர் வொல்கர் ரெக், வெளிவிவகார அமைச்சர் விஜித ஹேரத் உள்ளிட்ட பல தரப்பினரை சந்தித்து கலந்துரையாடியுள்ளார்.

இதன்படி, வொல்கர் ரெக்குடனான சந்திப்பு தொடர்பில் தமது எக்ஸ் பக்கத்தில் பதிவிட்டுள்ள வெளிவிவகார அமைச்சர் விஜித ஹேரத், மனித உரிமை பிரச்சினைகள் குறித்து ஐக்கிய நாடுகள் சபையுடன் ஆக்கப்பூர்வமான ஒத்துழைப்பை பேணுவதற்கான இலங்கை அரசாங்கத்தின் உறுதிப்பாட்டை மீண்டும் வெளிப்படுத்தியாhக குறிப்பிட்டுள்ளார்.

இருவரும் மனித உரிமைகள் தொடர்பான பரஸ்பர விடயங்களை பகிர்ந்து கொண்டதாகவும் அவர் தமது பதிவில் குறிப்பிட்டுள்ளார்.  அத்துடன் புதிய அரசாங்கம் பதவியேற்றதில் இருந்து தேசிய நல்லிணக்க முயற்சிகள் மற்றும் மனித உரிமைகள் என்பவற்றில் ஏற்பட்டுள்ள முன்னேற்றம் தொடர்பிலும் வொல்கர் ரெக்கிற்கு விளக்கியதாகவும் அமைச்சர் விஜித ஹேரத் தமது எக்ஸ் பதிவில் குறிப்பிட்டுள்ளார்.
இதேவேளை, வடக்கிலுள்ள தமிழ் கட்சிகள் ஐக்கிய நாடுகள் மனித உரிமைகள் பேரவையின் உயர்ஸ்தானிகர் வொல்கர் ரெக்கை நாளைய தினம் (25) சந்தித்து கலந்துரையாடவுள்ளன.

நாளை இரவு இந்த சந்திப்பு இடம்பெறும் என பாராளுமன்ற உறுப்பினர்களான செல்வம் அடைக்கலநாதன் மற்றும் ரிஷாட் பதியுதீன் ஆகியோர் உறுதிப்படுத்தினர்.  இதேவேளை, சில எதிர்க்கட்சி பாராளுமன்ற உறுப்பினர்கள் இன்றைய தினம் (24) ஐக்கிய நாடுகள் மனித உரிமைகள் பேரவையின் உயர்ஸ்தானிகர் வொல்கர் ரெக்கை சந்தித்து கலந்துரையாடியிருந்தனர்.

இன்று பிற்பகல் 4 மணியளவில் பாராளுமன்ற வளாகத்தில் இந்த சந்திப்பு இடம்பெற்றது.
இதேவேளை, நேற்று (23) பிற்பகல் இலங்கையை வந்தடைந்த வொல்கர் ரெக், பிரதமர் ஹரினி அமரசூரியவை சந்தித்து கலந்துரையாடியிருந்தார்.

பிரதமர் அலுவலகத்தில் நடைபெற்ற இந்த சந்திப்பின் போது, மனித உரிமைகளை காப்பது தொடர்பான அரசாங்கத்தின் உறுதிப்பாட்டை தாம் மீண்டும் வலியுறுத்தியுள்ளதாக பிரதமர் தெரிவித்துள்ளார்.
அத்துடன், காணாமல் போனோர் தொடர்பான அலுவலகம், இழப்பீட்டுக்கான அலுவலகம் மற்றும் நல்லிணக்கத்திற்கான அலுவலகம் ஆகியவற்றை வலுப்படுத்துவதன் மூலம் உள்நாட்டு பொறிமுறையில் பொறுப்புக்கூறலை உறுதிப்படுத்த முடியுமென்றும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

இதனிடையே வொல்கர் ரெக், தேசிய ஒற்றுமை மற்றும் நல்லிணக்க அலுவலகம் மற்றும் காணாமல் போனோர் தொடர்பான அலுவலகத்தின் அதிகாரிகளையும் சந்தித்து கலந்துரையாடல் நடத்துவார் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

இந்த விஜயத்தின் போது, ஐக்கிய நாடுகள் மனித உரிமைகள் பேரவையின் உயர்ஸ்தானிகர் வொல்கர் ரெக் யாழ்ப்பாணம் மற்றும் திருகோணமலைக்கும் செல்லவுள்ளதாக வெளிவிவகார அமைச்சு தெரிவித்துள்ளது.