வெலிக்கடை சிறை படுகொலைக்கான புதை குழி குறித்தும் விசாரணை நடத்த வலியுறுத்தல்!

1983 ஆம் ஆண்டு இதே மாதம் வெலிக்கடை சிறையில் வைத்து படுகொலை செய்யப்பட்டவர்கள் தொடர்பிலும்  அரசு விசாரணைகளை ஆரம்பிக்க வேண்டும் அவர்கள் புதைக்கப்பட்ட  புதைக்குழி எங்கேயுள்ளதெனவும் அரசு  கண்டுபிடிக்க வேண்டும் என  ஜனநாயகத்தமிழ் தேசிய கூட்டணியின் உறுப்பினர்  செலவம் அடைக்கலநாதன் தெரிவித்தார்.

பாராளுமன்றத்தில் செவ்வாய்க்கிழமை (22) இடம்பெற்ற வேலையாட்களின் வரவு செலவுத்திட்ட நிவாரணப்படி திருத்த சட்டமூலம் மற்றும் வேலையாட்களின் தேசிய குறைந்தபட்ச வேதன  திருத்த சட்டமூலம் ஆகியவற்றின் மீதான விவாதத்தில் உரையாற்றுகையிலேயே இவ்வாறு தெரிவித்தார்.

அவர் அங்கு  மேலும் உரையாற்றுகையில்,

இந்த மாதம் .வெலிக்கடை சிறையில் எம்மவர்கள் படுகொலை செய்யப்பட்ட மாதம். தமிழினத்தின் விடுதலைக்காக ,உரிமைக்காக முதலில் ஆயுதம் எடுத்து போராடிய தலைவர் தங்கதுரை, குட்டிமணி போன்றோர் பருத்தித்துறை மணற்காட்டு கடற்கரையில் 1981 சித்திரை மாதம் 5 ஆம் திகதி  இலங்கை  கடற்படையால் கைது செய்யப்பட்டார்கள்.1983 ஜூலை மாதம்  25,27 ஆம் திகதிகளில்   தமிழ் அரசியல் கைதிகள், பொதுமக்கள் என 53 பேர்  கொடூரமாக சிங்கள காடையர்களினால் படுகொலை செய்யப்பட்டார்கள்.

இந்தப்படுகொலைக்கு பொலிஸ் .சிறை அதிகரிக்க எல்லோரும்  உடந்தையாக இருந்தார்கள். குட்டிமணி உட்பட பலரின் கண்கள் பிடுங்கப்பட்டன.இரண்டு நாட்களாகி இந்த படுகொலைகள் இடம்பெற்ற சூழலில்   தலைவர் தங்கதுரை, தளபதி குட்டிமணி, ஜெகன்,நடேசதாசன், தேவன்,சிவபாதம் ,ஸ்ரீகுமார்,மரியாம்பிள்ளை,குமார்,குமாரகுலசிங்கம் மற்றும் டொக்டர் ராஜசுந்தரம் உட்பட 53 பேர் படுகொலை செய்யப்பட்டனர் .

எனவே 1983 ஆம் ஆண்டு இதே மாதம் வெலிக்கடை சிறையில் வைத்து படுகொலை செய்யப்பட்டவர்கள் தொடர்பிலும்  அரசு விசாரணைகளை ஆரம்பிக்க வேண்டும் அவர்கள் புதைக்கப்பட்ட  புதைக்குழி எங்கேயுள்ளதெனவும் அரசு  கண்டுபிடிக்க வேண்டும் உயிர்த்த ஞாயிறு குண்டுத்தாக்குதலை அரசு விசாரிப்பதுபோன்று இந்த வெலிக்கடை படுகொலைகளையும் விசாரணை செய்ய வேண்டும் என்றார்.