இன மத சமூக ஐக்கிய ஓற்றுமைக்கு பாதிப்பை ஏற்படுத்தும் நடவடிக்கைகளில் ஈடுபட்டவர்களை விசாரணையின்றி இரண்டு வருடங்கள் தடுத்துவைக்கும் உத்தரவை சிறீலங்கா அரசாங்கம் உடனடியாக விலக்கிக் கொள்ள வேண்டும் என சர்வதேச மனித உரிமை கண்காணிப்பகம் வேண்டுகோள் விடுத்துள்ளது.
மார்ச் மாதம் 9 ம் திகதி வெளியான 2021 முதலாம் இலக்க பயங்கரவாதத்தை தடுத்தல் தொடர்பான விதிமுறைகள், மிகவும் ஆபத்தான பயங்கரவாத தடைச்சட்டத்தை விரிவுபடுத்தும் ஒரு நடவடிக்கையே என சர்வதேச மனித உரிமைகள் கண்காணிப்பகம் தெரிவித்துள்ளது.
புதிய விதிமுறைகள் ஜனாதிபதி கோத்தபாய ராஜபக்ச மத மற்றும் சிறுபான்மை இனத்தவர்களை – அவர்களது உரிமைகளை மீறி இலக்குவைப்பதை சுலபமாக்கும் என தெரிவித்துள்ள சர்வதேச மனித உரிமை கண்காணிப்பகம், இலங்கையில் எதிர்கால மீறல்கள் பற்றி தெளிவான ஆரம்பகால அறிகுறிகள் குறித்து மனித உரிமை ஆணையாளர் எச்சரிக்கை விடுத்த பின்னர் இலங்கையில் மனிதஉரிமை மீறல்களை கண்காணிபதையும் பொறுப்புக்கூறலையும் வலுப்படுத்தும் தீர்மானம் குறித்து மனித உரிமைபேரவை ஆராய்ந்து வருவதாக தெரிவித்துள்ளது.
எவராவது வார்த்தைகள் மூலம் அல்லது எழுத்துவடிவில் அல்லது காட்சி வடிவில் வன்முறைகளை அல்லது இன மத சமூக ஐக்கியமின்மையை அல்லது நல்லெண்ணமின்மையை அல்லது சமூகங்கள் மத குழுக்கள் மத்தியில் மோதலை,ஏற்படுத்தும் எவரையும் அதிகாரிகள் தடுத்துவைத்து புனர்வாழ்வு அளிப்பதற்கு புதிய விதிமுறைகள் அனுமதியளிக்கின்றன என சர்வதேச மனித உரிமை கண்காணிப்பகம் தெரிவித்துள்ளது.
விசாரணைகளை எதிர்கொள்வதற்கு பதில் சந்தேகநபர் தடுப்புமுகாமில் ஒரு வருட கால புனர்வாழ்வினை எதிர்கொள்கின்றார் எனவும் தற்போதைய பாதுகாப்பு அமைச்சர் ஜனாதிபதி கோத்தபாய ராஜபக்சவிற்கு தடுத்துவைப்பதற்கான உத்தரவை மேலும் ஒரு வருடத்திற்கு நீடிப்பதற்கான அதிகாரம் உள்ளது எனவும் சர்வதேச மனித உரிமை கண்காணிப்பகம் தெரிவித்துள்ளது.
மார்ச் 12ம் திகதி பொதுமக்கள் பாதுகாப்பு அமைச்சர் சரத்வீரசேகர புர்கா மீதான தடை குறித்து அறிவித்தார்.அவர்அது தேசிய பாதுகாப்பு அடிப்படையில் நியாயப்படுத்தக்கூடியது என தெரிவித்தார்,அவர் 1000 இஸ்லாமிய பாடசாலைகளை மூடப்போவதாக தெரிவித்தார் இது நடைமுறைக்கு வந்தால் மத சுதந்திரத்திற்கான உரிமைகளை இது மோசமாக பாதிக்கும் எனவும் சர்வதேச மனித உரிமை கண்காணிப்பகம் தெரிவித்துள்ளது.
ராஜபக்ச அரசாங்கம் பயங்கரவாத தடைச்சட்டத்தையும் ஏனைய சட்டங்களையும்சிறுபான்மை சமூகத்தினரை இலக்குவைப்பதற்கு பயன்படுத்தியுள்ளது,குறிப்பாக தமிழர்களையும் முஸ்லிம்களையும் என தெரிவித்துள்ள மனித உரிமை கண்காணிப்பகம் சிறுபான்மை சமூகத்தினருக்கு எதிராக வன்முறைகளையும் பாரபட்சத்தையும் தூண்டியவர்களிற்கு எதிராக எந்த நடவடிக்கைகளும் எடுக்கப்படவில்லை என சுட்டிக்காட்டியுள்ளது.
கைது செய்யப்பட்டவர்களை புனர்வாழ்வளிப்பதற்கான புதிய விதிமுறைகளுடன் கூடிய வர்தமானி அறிவித்தல் சிறீலங்கா அரசாங்கத்தால் வௌியிடப்பட்டுள்ளது.
மேலும் தீவிரவாத நடவடிக்கைகளுடன் தொடர்புடைய குற்றச்சாட்டில் கைது செய்யப்பட்டவர்களை புனர்வாழ்வளிக்கும் புதிய ஏற்பாடுகள் அதில் குறிப்பிடப்பட்டுள்ளன என்பது குறிப்பிடத்தக்கது.



